Monday, June 25, 2018

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை



இந்தக் கட்டுரை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு மிகப்பழைய வழக்கு ஒன்றினை உங்கள் முன் தெரிவிக்க ஆசை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தென்னகப் பூமியை (திருப்பதியும் சேர்ந்துதான்) பேரரசன் ராஜேந்திர சோழன் ஆண்டபோது அவனுக்கு ஒரு புகார் வந்தது. திருமலையில் அவன் முன்னோர் வழங்கிய சில நகைகள், நில உபயங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையினால் உடனடியாக ஒரு குழுவினை அனுப்பிவைத்து இந்தக் குறைகள் களையப்படவேண்டும் என்பதே அந்தப் புகார். அந்த பேரரசன் உடனடியாக ஒரு அமைச்சர் குழுவை அங்கே அனுப்பி குற்றம் செய்தோரைக் கண்டித்துத் தண்டனை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிலைமையையும் சீர் செய்து கோயில் நிர்வாகம் சிறப்பாக செயல்படவேண்டி ஆணை பிறப்பித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தான். இந்தக் கல்வெட்டு இன்னமும் திருமலை பற்றிய வரலாறு எப்படியெல்லாம் தொடங்கியது என்பதற்கான முன்னுரையாக இன்றும் பதிவாக்கப்பட்டுள்ளது. சரி இது பற்றி பின்னர் வருவோம்.


சில நாட்கள் முன்பு வரை ஸ்ரீவேங்கடேஸ்வரா தொலைக்காட்சியில் அதிகாலைப் பொழுதில் ஸ்ரீ வேங்கடவன் தரிசனம் காண்பிப்பதற்கு முன்பேயே தன் முகம் காட்டி இன்று என்னவெல்லாம் திருமலைக் கோயிலில் நிகழ்ச்சிகள் என்பதை மிக சாந்தமாக கையைக் கட்டிக்கொண்டு கனிவான குரலில் ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து புன்முறுவல் கூட அதிகமாக வெளிக்காட்டாமல் கடமையைச் செய்யும் கர்மகர்த்தாவாக ‘இன்று இதுதான் இது’ என்பதாக நாளும் தன் பாணியில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் இல்லாமல் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

அவர்தான் திருவாளர் டாக்டர் கொல்லப்பள்ளி ஏ.வி. ரமண தீட்சிதலு, திருமலை ஸ்ரீவேங்கடவன் கோயில் தலைமை அர்ச்சகர். நீக்கப்பட்டதன் காரணம்: பணி ஓய்வு வயது ஏறுவது கூட தெரியாமல் பணியாற்றியது. (1987 ஆம் ஆண்டில் ஆந்திரமாநில அரசுச் சட்டப்படி கோயில் அர்ச்சகருக்கான உச்சகட்ட பணிஓய்வு வயது 65. அறுபத்து ஐந்து வயது முடிந்தவுடன் அடாவடியாக ஆண்டவன் சேவையை விட்டு விட்டு வீட்டில் உட்காரவேண்டும்.)

அட வேங்கடவா! ஸ்ரீமான் ரமணதீட்சிதலு அவர்களுக்கு திடீரென 65 வயது எப்போதோ கடந்துவிட்டதை இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்படித்தான் துப்பறிந்துக் கண்டுபிடித்தார்களோ.. ஒருவேளை இவருக்கு அதிகார வர்க்கத்தார் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டார்களோ.. அவரே போய்விடுவார் என்று தினம் தினம் அவன் கோவில் வாசலிலே சாவிக்காகக் காத்திருந்தார்களோ என்னவோ.. இப்படியெல்லாம் ஆகவில்லை என்பதற்காக ஸ்ரீமான் ரமண தீட்சிதலுவை வேறு வழியில்லாமல் திடீரென தூக்கிவிட்டார்கள் போலும்.


வேறு ஒன்றுமில்லை.. விஜயநகரமன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் அளித்த ஆபரணங்கள் ஏன் சிறப்பு அலங்காரத்துக்காக வழங்கப்படுவதில்லை.. எனக் கேட்ட ஒரு கேள்விக்காக அவர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ராஜா அன்பாக அளித்த நகைகள் 1996 ஆம் ஆண்டு வரை அர்ச்சகர் பொறுப்பில்தான் இருந்தன. ஆனால் அந்த வருடம் சுப்ரீம் கோர்ட்டால் பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகளால் கோயில் நகை மீதிருந்த அதிகாரமும், கோயில் மிராசு அதிகாரமும் அர்ச்சக வர்க்கத்தினமிருந்து பறிக்கப்பட்டது. இந்த உத்தரவுப்படியே கோயில் நகைகள் அதிகாரிகள் வசம் பட்டியலிடப்பட்டு கொடுத்தாகி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த கோர்ட் கேஸ் கூட மறு விசாரணை கோரியும் நியாயம் வழங்க மறு தீர்ப்பு கேட்டும் இன்னமும் நிலுவையில் உள்ளதுதான். இது ஒருவகை குழப்பமான வழக்கு. யார் யாருக்கு இந்தக் கோயில் மீது என்னென்ன சொந்தம், மிராசுகள் எனப்படுவோர் யார் யார் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதெல்லாம் எழுதி இந்தச் சமயத்தில் யாரையும் குழப்ப மனம் இல்லை. அத்துடன் இந்த கோயில் மிராசு வழக்கு பற்றியும் கோயில் லட்டு பற்றியும் நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதிப் பதிப்பித்துள்ளேன். (http://aduththaveedu.blogspot.com/2012/04/blog-post.html) இது ஒருபக்கம் அந்த கேஸ் அங்கே கிடப்பது போல இருக்கட்டும்.

சரி, திடீரென இந்த வருடம் இந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர் நகைகளைப் பற்றி இந்த தலைமை அர்ச்சகர் இந்த பிரச்னையை ஏன் எழுப்பவேண்டும். இருபது வருடங்களாக இந்தத் தலைமை அர்ச்சகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ஏன் இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்கவில்லை. இதற்கு ஸ்ரீ ரமண தீட்சிதலு தரும் பதில் ‘நாங்கள் ஒவ்வொருமுறையும் அந்தப் பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், அவர்கள் ஒவ்வொருமுறையும் ஏதாவது சாக்கு சொல்லிப் பொழுதைக் கழித்து விடுவது வழக்கமாகிவிட்டது. இனியும் விடுவதாக இல்லை என்கிறபடியால் என் கேள்வியை பத்திரிகையாளர் கூட்டம் போட்டு அதைப் பொதுவில் வைத்தோம்’.


 அடக்கடவுளே.. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் இத்தகைய நகைகள் வழங்கியதை எத்தனையோ கல்வெட்டு, செப்புப் பட்டயம் என பொறித்துப் போயிருக்கிறாரே.. போதாதற்கு அரசரின் மனைவியர் இருவர் போட்டி போட்டுக் கொண்டு அல்லவா ஆண்டவனுக்கு அலங்கார ஆபரணம் செய்திருக்கிறார்கள்? அத்தனையும் கல்வெட்டாக செப்புப் பட்டயங்களாக மாபெரும் ஆவணமாக இருக்கிறதே.. 1996 வரை கண்முன் இருந்த இந்த நகைகள் என்ன ஆயிற்று? பழைய நகைகள் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டாமா.. இன்னமும் நம் நாட்டு கோஹினூர் வைரக்கல் இங்கிலாந்து நாட்டு ராணியின் மகுடத்தில் இருப்பதை எத்தனை பெருமையாகவோ பொறாமையாகவோ அல்லது எரிச்சலாகவோ ஏன் பெருமிதமாகவோ உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.. அட, திப்பு சுல்தானின் வாள் ஒன்று சில வருடங்கள் முன்பு இங்கிலாந்தில் ஏலம் விட்டபோது நமது இந்திய நாட்டின் ஏகபோக தேசப்பற்றாளர் திருவாளர் மல்லையா லண்டனுக்குப் பறந்து சென்று ஏலக்காரர்களிடம் அதிகப் பணம் கொடுத்து மீட்டினாரே.. அப்படி இருக்கையில் ஐந்நூறு வருடங்கள் பழமையான பாரம்பரியம் மிக்க நகைகள் திருமலையில் திருவேங்கடவனுக்கு சார்த்தப்படாமல் எங்கே போய் விட்டன. தலைமை அர்ச்சகர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைத்தவுடன் களவு போய்விட்டதா? காணாமல் போவிட்டதா?

சரி, அதிகாரவர்க்கம் என்ன சொல்கிறது.. ‘பழைய நகைகள் மராமத்து செய்யப்படுவது என்பது பண்டைய காலத்திலிருந்தே வரும் வழக்கம்தான். எல்லா நகைகளும் எங்கும் காணாமல் போகவில்லை.. புது உருவில் வந்து கொண்டே இருக்கிறது.. அதில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் நகைகளும் அடக்கம்’ என்று ஒரேயடியாக ஒரே போடு போட்டு சந்தடி சாக்கில் தலைமை அர்ச்சகரையும் நீக்கிவிட்டு கூடவே அதே வயது காரணத்தின்பேரில் இன்னும் மூன்று அர்ச்சகர்களையும் தூக்கிவிட்டார்கள்.

அது சரி, இவர்கள் நீக்கியதற்கு மறைமுகக் காரணம் தெரிந்துவிட்டது. இவர்கள் ஊழல்கள் வெளிப்பட்டதால் இவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருமே தெரிந்த ரகசியம் போலத்தான் சொல்கிறார்கள். ஆனால் நீக்கியதற்கான காரணத்தை நேர்மையாகவே சொல்லி இருக்கலாம். ஏனெனில் ஆதியிலிருந்தே ஸ்ரீ ரமண தீட்சிதலு மற்றும் தலைமை அர்ச்சகர்கள் மூன்று பேர் திருமலை தேவஸ்தான பணியாளர்களே இல்லை. அவர்களுக்கு மாத சம்பளமோ, கிராஜுவிடி, பென்ஷன், லீவுத் தொகை போன்ற அரசாங்க பண உதவிகளோ கிடையாது. இவர்கள் அரசாங்கப் பணியாளர் என அரசாங்கமும் ஒரு ரிகார்டும் வைத்துக் கொள்வதில்லை. ஒருநாள் கூட விடுமுறை எடுக்கமுடியாமல் இரவு பகலெனப் பாராமல் இறைவனுக்கு சேவை செய்யும் இவர்களுக்கு சம்பாவனை என்ற ஒரு கௌரவத்தால் தினம் செய்கிற பூஜைக்கேற்றவாறு சன்மானம் வழங்கப்படும். அவ்வளவுதான். இதுதான் பண்டைய காலத்திலிருந்து செய்யப்பட்டு வருகின்றது.. இன்றளவும் தொடர்கின்றது.

திருமலை வேங்கடவனுக்கு தலைமை அர்ச்சகராக மொத்தம் நான்கு குடும்பங்களுக்குதான் கடந்த சில தலைமுறைகளாக பொறுப்பு வழங்கப்படுகிறது. இந்த நான்கு குடும்பங்களில் ஸ்ரீ ரமண தீட்சிதலு சார்ந்த கொல்லப்பள்ளி குடும்பத்தாரும் ஒன்று. இப்படித்தான் பல ஆண்டுகளாக இந்த திருப்பணி செய்யப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை.  பிரசித்திபெற்ற 1996 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னும் அதன் பின்னர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகவும் இது தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது. திருமலை திருவேங்கடவனின் தனிப்பட்ட கோயில் பூசை விதானம் பற்றியோ அதன் ஆகமவிதானங்கள் பற்றியோ, தலைமை அர்ச்சகர்கள் பற்றியோ உச்சநீதி மன்றமும் சரி, மாநில அரசாங்கமும் சரி இதுவரை தலையிட்டதில்லை. தலைமை அர்ச்சகருக்கு உரிய கௌரவத்தில் குறை வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்ததால் பழைய பழக்கத்தையே தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் திடீரென இப்போது இந்த வழக்கங்களை மாற்ற முன் வந்ததோடு மட்டுமல்லாமல் வயது அதிகமாகிப் போகின்றது என்ற கவலையும் இவர்கள் மீது பட்டு அரசாங்கம் நடவடிக்கையும் எடுத்து விட்டது.

அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக மாறிவிட்ட தற்போதைய ஆந்திர அரசியல் காரணங்களுக்காக ஸ்ரீரமண தீட்சிதலு இத்தகைய நடவடிக்கையை எதிர்கொண்டாலும், ஒரு தலைமை அர்ச்சகர், அதுவும் திருமலைக் கோயில் தலைமை அர்ச்சகர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அரசாங்கத்தார், முக்கியமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் உணரத் தவறியதேன்?

ஸ்ரீரமண தீட்சிதலுவின் ஏனைய குற்றச்சாட்டுகளும் கவனிக்கத்தக்கவை.
1. பிரமுகர்கள் தரிசனத்துக்காக, அந்த பிரமுகர்களின் வசதித்தன்மையை ஒட்டி திருவேங்கடவனுக்குச் செய்யவேண்டிய பூஜை வகையறா கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வற்புறுத்தல் அல்லது ஆணைகள் வரும் காலகட்டத்தில் அது அதிகாலை சுப்ரபாத சேவையாகட்டும் வழக்கமான காலைநேரத்து தோமாலை சேவை போன்றவை தாறுமாறாக நடக்க வழி வகுக்கின்றனர். ஒரு சில சமயங்களில் சுப்ரபாத சேவை நள்ளிரவில் அப்படியே தொடரச் செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சுப்ரபாத சேவைக்காக வந்த வி.ஐ.பி காலையில் அதுவும் அதிகாலை வரை தூங்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காக திருவேங்கடவன் தரிசனத்தை நள்ளிரவில் நிறுத்தாமல் அவரை ஒரு சில நிமிடம் கூட பள்ளிகொள்ளவிடாமல் தொடர் ஓட்டம் போல 24/7 சுவாமியாக்கி, அந்த நள்ளிரவிலேயே சுப்ரபாதம் ஆரம்பிக்கவைத்து திருவாராதனைகளை வழக்கம்போல தொடங்கிவிடுகின்றனர். வேறு எந்தக் கோயிலிலும் இப்படி நடப்பதில்லை. தினமும் ஏராளமான பிரமுகர்கள் குலசேகரப்படி வரை அழைத்துச் செல்லப்பட்டு வருவதும், சாதாரண பக்தர்கள் அருகே செல்லமுடியாதபடி மகாத்வாரம் வழியே சுவாமியை ஒரு நொடி காண்பித்து உடனடியாக துரத்தப்படுவதும் வாடிக்கைதானே..

2. பிரதான அர்ச்சகர்கள் ரொடேஷன் முறையில் சுவாமி திருப்பணிக்காக கருவறைக்குள் வருமுன் அடுத்த பிரதான அர்ச்சகருக்கு தேவஸ்தான அதிகாரி முன்னிலையில் சுவாமியில் அலங்காரத்துக்கான வரைமுறைகள், இன்னின்ன நகைகள் தேவையானவை, வைர வைடூரியங்கள் இவை பற்றிய தகவல்கள் தேவஸ்தான அதிகாரியால் பதிவு செய்யப்படவேண்டும். இது 1996 வரை நடந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாறுமாறாகிப்போனது. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அளித்த பிரத்யேக நகைகள் சுவாமியில் சிறப்பு நாள் சிறப்பு அலங்காரத்துக்காக தருவிக்கப்படவேண்டும். அது நிறுத்தப்பட்டது.

 3. பொட்டு எனச் சொல்லப்படும் கோயில் உள்ளே அமைந்த சமையலறையை தேவஸ்தான அதிகாரம் சீர்படுத்துவதாக பத்துநாட்கள் வரை ஏதேதோ மராமத்து செய்து அந்தக் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வெளியே இருந்து சமையல் செய்யப்பட்டு சுவாமிக்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டது. இதுவரை இப்படி நடந்ததில்லை.


அர்ச்சகர்கள் மீது 1987 முதலே திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஆந்திர அரசாங்கமும் குறி வைத்து தாக்கிக்கொண்டே வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் வம்சாவழி அர்ச்சகர்கள் வரக்கூடாது என்றும் இருக்கும் அர்ச்சகர்கள் கூட 65 வயது வரைத்தான் அங்கே பூஜை செய்யவேண்டுமென்றும் அரசாணை ஒன்று 1987 இல் திரு என்.டி.ஆர் தலைமையில் உள்ள அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து கோர்ட்டில் எதிர்த்து வாதாடப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் ஒரு அர்ச்சகர் ஒரு கோயில் கோபுரத்தின் மணியை அடித்து நியாயம் கேட்டு அங்கிருந்து குதித்து உயிர்விட்டார். 2007 ஆம் ஆண்டில் திரு ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணாராவ் எனும் ஆந்திர அரசாங்க தலைமை அதிகாரி அர்ச்சகர்களுக்கு இந்த கேஸை வாபஸ் வாங்கினால் இந்தத் தடைச்சட்டத்தையும் அரசு பரிசீலிக்கும் எனும் வாக்குறுதியை நம்பி சில கோர்ட் கேஸ்கள் வாபஸ் வாங்கப்பட்டாலும் இதுநாள் வரை எந்த அரசாங்கத்தாரும் அர்ச்சகருக்காக ஒரு குழுவைக் கூட அமைக்கவில்லை.

அர்ச்சகர்களைப் பற்றியும் அவர்கள் திருவேங்கடவனின் மேல் கொண்ட பற்றினைப் பற்றியும் சரித்திரம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைஷ்ணவ பரம்பரை இங்கே அர்ச்சக சேவகம் புரிந்து வந்திருக்கிறது. இராமானுஜரும், தேசிகர்சுவாமியும், மணவாள மாமுனியும் பரிபாலித்த திருக்கோயில் இது. மத்திய காலத்தில் திருக்கோயிலின் பொறுப்பு முழுதும் அர்ச்சகர்கள் கையில் இருந்ததற்கு ஏகப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் மலேரியா அங்கு வந்ததால் யாரும் திருமலை செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அர்ச்சகர் குடும்பம் அனைவரும் அந்தத் தடையை மீறி மலையிலேயே இருப்போம் என்று சேவை செய்தவர்கள். இவையெல்லாம் கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

திருமலை ஆண்டவனுக்கு பிரதானம் எப்போதுமே அவனை நாடி வரும் பக்தர்கள்தான். பிரதான அர்ச்சகர்களாக இருந்தாலும் சரி, சாதாரண அர்ச்சகர்களாகவோ வேதம் பாடும் பண்டிதராகவோ இருந்தாலும் சரி, பக்தர்களுக்காகத்தான் அவன் அங்கே கோயில் கொண்டிருக்கிறான். இது முறையான பதில்தான் என்றாலும் அந்த எளிய பக்தர்களை சிறைக் கைதிகள் போல பாவித்து பலமணி நேரங்கள் அறையில் அடைத்து அதன்பிறகு அவனை நெருங்க நெருங்க ஒழுங்கான முறையில் சீர் செய்யாமல் அரக்க பரக்க நெருக்கி மகாத்துவாரம் வரை மட்டுமே அவர்களை இழுத்து வந்து அனுப்பி வைக்கும் அதிகார வர்க்கத்தைப் பற்றி ஏற்கனவே மூன்று பிரிவுகளாக எழுதி அதனை வம்சதாரா வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். (http://vamsadhara.blogspot.com/2014/02/blog-post_22.html) பக்தரும் சரி, பிரதான அர்ச்சகரும் சரி, எங்கள் நடைமுறைக்கு ஒத்துப் போகாவிட்டால் கஷ்டம்தான் என்பதை சமீப காலமாக அரசாங்கமும் அதிகாரிகளும் சர்வ சாதாரணமாக நிரூபித்துள்ளார்கள்.

எல்லாம் தெரிந்த  அந்த அதிகாரிகளும் அரசாங்கமும் ஒன்றை மட்டும் அடியோடு மறந்துவிடுகிறார்கள். அது வேறொன்றுமில்லை. அந்த திருமலைத் தெய்வம்தான். அவர் சாட்சி பூதம். சதா நின்று கொண்டே ஒரு கணம் கூட இமைக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு வரும் சாட்சி பூதம்.

ஹிரண்யகசிபு கதை நினைவுக்கு வருகிறது. அவன் கொடுத்த கஷ்டங்களையெல்லாம் மகன் பிரகலாதன் அனுபவித்துக் கொண்டிருந்ததை தந்தை எனும் முறையில் அவனேக் காண சகியாது, ‘அடேய்.. நாராயணன் இங்கே வந்து உனக்கு உதவமாட்டானடா.. எல்லா வரங்களையும் நானே பெற்று நானே தெய்வமாகிவிட்டேனடா.. என்னையே தெய்வம் என ஒப்புக் கொள்.. அப்படி ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அவனையாவது என்னிடம் வரச்சொல். ஆனால் அவன் வரமாட்டானடா’ எனக் கெஞ்சும் ராட்சனனிடம் பிரகலாதன் சொன்னானாம். ‘உண்மையான பக்தனுக்காக என் நாராயணன் இதோ உன் வெற்றிகளின் அடையாளமாக உன் கையால் நீயே கட்டிய  இந்தத் தூணிலும் இருந்து கூட வருவான்.. அப்படி வரவில்லையென்றால் நான் அவன் பக்தனே அல்ல..” என்ற பிரகலாதனின் சொல்லை முடிக்கக்கூட விடாமல் நாராயணன் நரசிம்மனாக அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்துவிட்டான்.

இது ஹிரண்யகசிபுக்களின் காலம் போல. துரதிருஷ்டவசமாக இந்த அதிகார வெறி பிடித்த பலவான்களாகத் திகழும் ஹிரண்யகசிபுகள் பக்திமிக்க பிரகலாதர்களைப் பெறவில்லையோ என்னவோ..

பக்தன் எனச் சொல்லும்போது ஸ்ரீகிருஷ்ணதேவராயன் நினைவுதான் வருகிறது. அவன் கோயில் வாயிலிலே எப்போதும் தாம் அவனை வணங்குவது போல பிரத்தியட்ச சிலையாக தாம் இருக்க விரும்பினான். அவனோடு அவன் மனைவியர் இருவருமே மண்டப வாயிலிலேயே அவன் தரிசனத்துக்காக இப்போதும் காத்துக் கிடப்பதாகத்தான் அவர்கள் சிலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நான் உணர்வேன். உத்தமன். அந்த ஒரு திராவிட அரசன் வந்ததால் மட்டுமே தென்னகத்தில் எத்தனையோ கோயில்கள் சீரமைக்கப்பட்டன. அந்த பக்தன் தன்னை ஆண்ட திருவேங்கடவனுக்கு பய பக்தியோடு அளித்த நகைகள் இந்த இருபது வருடங்களில் எங்கு போயினவோ என்ற ஆதங்கத்தால்தான் இந்தக் கட்டுரை எழுந்துள்ளது.

மறுபடியும் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பேரரசன் ராஜேந்திர சோழன் செயல்பட்ட விவரத்துக்கு வருகிறேன். கங்கைகொண்டசோழபுரத்தில் மிகப் பெரிய கோயில் கட்டி வரலாற்றில் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றவன் தொண்டை மண்டலத்து திருவொற்றியூர் திருக்கோயில் கோபுரத்தைக் கட்டியவன் அந்த மகராசன் திருமலைக் கோயிலுக்கு  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  நியாயம் செய்தது போல உரியவர்கள் இப்போதும் நியாயம் செய்யத்தான் வேண்டும். உடனடியாக ஒரு மேல்நிலைக் குழு அமைத்தாகவேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கலைக்கப்பட்டு அங்கே எளியவர்களும் ஆன்மீகவாதிகளும் ஆளுமை தெரிந்த மேன்மக்களும் கலந்த ஆளுமைக்குழு அமைக்கப்பட்டு எல்லாவிதக் குறைகளும் களையப்படவேண்டும். கலியுகத் தெய்வம்தான் இதற்கு ஆவன செய்யவேண்டும். திருமலையில் சாந்தி நிலவவேண்டும். எளிய பக்தர்கள் சீராக அவன் அருகே உள்ள குலசேகர ஆழ்வார் வாயிற்படிவரை வந்து செல்ல அருள் புரியவேண்டும். அர்ச்சகர்கள் அவன் மனம் விரும்பும் வகையில் வேதோத்தமமாக பூஜை செய்ய அனுமதி வழங்கவேண்டும்.

திருமலைத் திருடன் நாவல் மூலம் அவனை அருகில் இருந்து அண்ணாந்து பார்த்தவன். என் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது போல எத்தனையோ கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்தக் கள்வனின் அருகேயே கள்ளத்தனம் நடக்கவிடலாமா?

அகலகில்லேன் இறையுமென அலர்மேல் மங்கையுறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வோனே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன்னடிக் கீழமர்ந்து புகுந்தேனே. (நம்மாழ்வார்)


Sunday, August 06, 2017

இமாலயன்


1962 ஆம் வருடம் நவம்பர் 19ஆம் நாள்.

நவம்பர் 19, 1962 சனிக்கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்திலே ஒரு முக்கியமான நாள். தென்னகம் எப்படியெல்லாம் தவித்ததோ, இந்திய மேற்குப் பகுதிகள் எப்படியெல்லாம் விஷயம் அறிந்து மிரண்டதோ யாம் அறியோம். ஆனால் வடமாநிலங்களும், வடகிழக்கு மாநிலங்களிலும் அங்குள்ள மக்களுக்கெல்லாம் மிகப் பெரிய பயத்தை உருவாக்கின நாள். தில்லி அரசாங்கமே கதி கலங்கிப் போயிருந்தது எனறு சொன்னால் அது மிகை அல்ல என்று பத்திரிகைக்காரர்களால் எழுதப்பட்ட நாள், உலக அளவில் தலைவர்களால் கெட்டிக்காரர் என்று வானளாவப் புகழப்பட்ட பாரதப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து யார் பேச்சைத்தான் கேட்டு நம்புவது என்று பரிதவித்த நாள்.. அகன்ற பரந்த பாரதம் சிறுத்துவிடுமோ என்று விஷயம் தெரிந்த அனைவருமே பயந்த நாள்.

ஆம் அன்றுதான் சீனத்தின் மிகப் பெரிய ராணுவம் தம் காலாட்படைகள் மூலம் அநாயசமாக இந்தியாவின் மலை உச்சிப் பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய அருணாசலப்பிரதேசத்தை முழுங்கிகொண்டு, அதன் எல்லை நகரமான போம்டாலாவைத் தாண்டிக்கொண்டு அசாம் மாநில எல்லைக்குள் காலடி வைத்த நாள். ஏறத்தாழ நமக்கு வடக்கு எல்லையான இமயமலையின் ஒருபகுதியை வலுக்கட்டாயமாக பிடுங்கியாகிவிட்ட திருப்தியில் ஏனைய பகுதிகளையும் சுற்றி வளைத்த நாள்.

அருணாசப் பிரதேசத்திலிருந்து அசாம் எல்லைக்குள் அன்றிரவு நுழைந்த சீனா அடுத்த நாள் அசாமின் மிகப் பெரிய நகரமான தேஜ்பூரைக் கண்டிப்பாகப் பிடித்துவிடும் என்று எல்லோருமே எண்ணியதால் அவசரம் அவசரமாக தேஜ்பூர் காலி செய்யப்படுகின்றது. பிரம்மபுத்ரா நதியில் படகு மூலம் முதற்கொண்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.

வெளிநாடுகளின் வழியே கிடைத்த வெவ்வேறு தகவல்களால் கவலை அடைந்த  இந்தியப் பிரதமர் ஆகாசவாணி மூலம் தில்லியிலிருந்து பேசுகிறார். அசாம் இந்தியாவை விட்டு கை நழுவிப் போனதற்கு அசாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

அடுத்து கல்கத்தா வருவார்களா? சீனப்படையின் விமானப்படை இனியும் சும்மா இருக்காமல் இந்தப் போரில் கலந்து கொண்டு கல்கத்தா மீது குண்டு வீசுமா என்றெல்லாம் வடமாநிலங்களெங்கும் அதிர்ச்சிப் பேரலைகள்.

தேஜ்பூர் நகரம் முழுதும் இருட்டில் அடைந்து கிடக்கிறது தொலைத் தொடர்பு சாதன வசதிகல் சரியில்லாத கால கட்டம்.. பீகிங் ரேடியோ அலைவரிசை மட்டுமே அந்த நகரத்தில் ஒலிக்கின்றது. என்ன நடக்கின்றது என்று யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. இண்டியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு சில வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மட்டும் மிகத் தைரியமாக தேஜ்பூர் தேயிலை முதலாளிகள் விருந்தினர் மாளிகையில் பீகிங் ரேடியோ செய்தியைக் கேட்டுக் கொண்டே அடுத்து வரப் போகும் சீனப் படையினரை எதிர்நோக்கும்போது அடுத்த நாள் காலைநேரத்தில்தான் அப்படியொரு செய்தி அதே பீகிங் ரேடியோவில் அறிவிக்கிறார்கள்.

சீனப்படைகள் ‘தாமாகவே’ யுத்த நிறுத்தம் செய்து கொண்டு முந்தைய பழைய நிலைக்கு உடனடியாகத் திரும்புவார்கள் என சீனப் பிரதமர் சூ என் லாய் அறிவிப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.

இதிலென்ன விசேஷம் என்றால் அருணாசலப்பிரதேசப் பகுதியெங்கும் டெலிபோன் வசதிகள் மோசமான நிலையில் இருந்த காலம் அது. பீகிங் செய்தி ரேடியோ மூலம் தேஜ்பூரில் செய்தி இருபதாம் தேதி வருகின்றது என்றால் பத்தொன்பதாம் தேதி இரவே அருணாசல மலைமுகடுகளில் முன்னேறிக்கொண்டிருந்த சீனப்படைகள் எல்லாம் திரும்ப தங்கள் ஆதியில் இருந்த இடத்துக்காக ஓடிக்கொண்டிருந்தனர். (இதற்கு இன்னமும் அங்குள்ள பெரியவர்களே சாட்சி, அவர்கள் கண்கண்ட காட்சி) அங்கு முகாமிட்டிருந்த சீன வீரர்களுக்கு அதுவும்  ஒரே இரவு நேரத்தில் ”சீனத் தலைவரின் யுத்த நிறுத்தம்” செய்தி எப்படிக் கிடைத்தது? மலைகள் ஏராளமாக நிறைந்த அருணாசலப் பிரதேசத்தில் இவர்களுக்கு சூ என் லாய் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை எப்படித் தெரிவித்திருப்பார்? சீனப்படைகள் கைப்பற்றிய மலைகளில் உள்ள மலைமக்கள் யாவரும் சீனப்படையை வெறுத்துக் கொண்டிருக்க, அவர்களில் பலரும் இந்தியாவுக்காகப் போராடி உயிர் விட்டிருக்க, யுத்தத்தின் சூழ்நிலை தமக்கு சாதகமான வேளையில் திடீரென சீனா ஏன் யுத்த நிறுத்தம் செய்யவேண்டும்.

சீனாவின் இந்தியப்படையெடுப்பு பற்றிய பல புத்தகங்கள். பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு பெரிய மாநிலத்தைக் கைப்பற்றிய சீனா அதிவேகமாக இந்தியாவின் படைகளை வென்றுகொண்டே வந்தவர்கள் இந்த திடீர் அறிவிப்பான ‘தாமாக முன்வந்து செய்த நிறுத்தம்’ பற்றி இதுவரை யாருமே முக்கியத்துவம் காட்டவில்லை. இதுதான் வியப்பு.

19 ஆம் தேதி சீனப்படைகள் நிச்சயமாக ‘போம்டாலா’ விலிருந்து சற்றுக் கீழே உள்ள தேஜ்பூரை கடகடவென அடைந்து காலியாகக் கிடக்கும் அந்த முக்கியமான நகரைக் கைப்பற்றிப் பெரிய அளவில் இந்தியாவோடு பேரம் பேசி இந்த யுத்தத்தின் பிரச்சினைகளை அவர்களுக்குச் சாதகமாக முடித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன். அதுவும் தாமாக முன்வந்து எந்தக் காரணத்தையும் முன் வைக்காமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன் – இந்தக் கேள்விக்கு அன்றைய நிலையில் யாருக்குமே பதில் சொல்லத் தோன்றவில்லை.. ’ஆஹா.. சீனா, தாமாகவே முன்வந்து யுத்த நிறுத்தம் சொல்லி உடனடியாக பழைய நிலைக்குத் திரும்ப ஒப்புக்கொண்டது. அசாம் மாநில எல்லைக்குள் வரவே இல்லை.. எடுத்துக் கொண்ட அருணாசலப் பிரதேசமலைகளும் திரும்பக் கிடைத்துவிட்டன.. இதுவே போதும்’ என்ற மனநிலையில்தான் அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது என்னவோ வாஸ்தவம்தானே.

ஆனால் இந்த யுத்த நிறுத்தம் சீனாவால் ஏன் அன்று (நவம்பர்) 19/20 ஆம்தேதி பார்த்துச் சொல்லவேண்டும் என்கிற கேள்விக்குறிக்குப் பதில் சொல்லும் விதமாகத்தான் ‘இமாலயன்’ என்கிற இந்த புதினத்தை எழுதியுள்ளேன்.

சுதந்திரம் கிடைத்த பதினேழு வருடங்களிலேயே அதுவும் ஒரு நியாயமான ஜனநாயக நாடாக மாறிப்போன இந்தியாவை நம் மனதில் இன்றைய நிலையில் நினைத்துக் கொண்டு அன்று நடந்த அந்த இந்தோ சீன யுத்தத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்போனால், அந்த யுத்தம்தான் இந்தியாவை இந்தியனுக்கு இதயம் திறக்கச் செய்தது. அந்த ஒரு யுத்தம்தான் இந்தியாவின் பலம் பலவீனம் இரண்டையும் கண் திறக்க வைத்தது. தேசத்துக்கு அதன் வளர்ச்சிக்கு, தேசத்தின் புகழ் உலகமெங்கும் பரவி, மிக பலமான வளநாடு இந்தியா என்று இன்று சொல்வதற்கு ஆதிகாரணம்தான் அன்றைய இந்தோ சீன யுத்தம் என்று சொன்னால் கூட மிகையாகாது.

இந்த இந்திய சீன யுத்தம்தான் ‘இமாலயன்’ புத்தகத்துக்கு மேடை. இந்த மேடையில் ஆடுகின்ற கதாபாத்திரங்கள் எல்லாவகைக் குணங்களையும் கொண்டவர்கள். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அலுவலகர்கள், அரசர்கள், வீரர்கள், சாதாரண மக்கள் என எல்லோரும் இந்த மேடையில் வந்து போகிறார்கள். அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்து நவரசங்களையும் நம்மிடையே தந்து செல்கிறார்கள். ஆட்டுவிப்பவன் மட்டும் என் எழுத்தைக் கைக்கொண்டு ஆட்டி வைத்திருக்கவேண்டும் என்றுதான் சொல்வேன்.

இந்தப் புத்தகம் புதினம்தான். இந்தப் புதினத்தில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்ததா இல்லை கற்பனையாக எழுதப்பட்டதாக எனக் கேட்டால் உறுதியான ஒரு விளக்கம் என்னிடம் நிச்சயமாக இல்லை. என்னால் விளக்கம் தரவும் இயலாத நிலை.. இந்த நிலை ஏன் வந்தது என்பதை இப்புதினத்தைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

நான்காண்டுகள் இந்தப் புதினத்துக்காக  செலவிட்டிருக்கிறேன். தகவல்கள் வரவேண்டும். தகவல்களின் தரம் தெரியவேண்டும். இந்தோ சீன யுத்தத்தைப் பற்றிய எழுதியவர்கள் புத்தகங்களைப் படித்துள்ளேன். கொஞ்சம் மார்க்ஸையும் மாவோவையும் பற்றியும் அவர்களின் சித்தாந்தங்கள் பற்றியும் படித்தும் கேட்டும் உள்ளேன். நேருஜியின் சோஷலிஸ சித்தாந்தத்தையும் படித்திருக்கிறேன். கல்வியாளர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், இந்திய ராணுவப்படையில் ஓய்வு பெற்ற வீரர்கள், புத்தமதத்துப் பெரியவர்கள், தலாய்லாமா விசுவாசிகள், சீனத்துப் பேராசிரியர்கள் இவர்களிடமெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இது பற்றி உரையாடியுள்ளேன். இமயத்தின் காதலர்களிடம் அவர்களைத் தூண்டிவிட்டு கதை கேட்டிருக்கிறேன். இமயத்தில் குடிகொண்டோரிடமுமிருந்து இறைவன் அருளால் சில முக்கிய விஷயங்கள் தெரிந்துகொள்ள சந்தர்ப்பங்களூம் கிடைத்தனதான்.. இத்தனையும் இப்புத்தகத்தில் ஆங்காங்கே தூவியுள்ளேன்.

இந்தப் புதினத்தை எழுதும்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களெல்லாம் என்னால் எழுத்தில் வடிக்க முடியாதுதான். முடிந்தவரை கதையோட்டம் மூலம் வாசகர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இமாலயன் புதினத்தை முடிக்கும்போது அவனைப் பிரிகின்றோமா என்கிற எண்ணம் என் மனத்தில் ஒரு மூலையில் எழுந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் அது மாயையான உணர்ச்சி, இமாலயனை நான் படைக்கவில்லை. என்னுள்ளத்திலே எப்போதிலிருந்தோ அவன் இருந்து எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தே இருக்கவேண்டும். காலம் வந்தபோது என் எழுத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.. அதனால் மட்டுமே உறுதியாகச் சொல்லமுடியும், என்னால் இமாலயனை எந்தக் கணமும் பிரியமுடியாது..     

வழக்கம்போல என் எழுத்துக்களைப் பதிப்பித்து வரும் பழனியப்பா பிரதர்ஸ் இமாலயனையும் புத்தகமாக வெளியே கொண்டு வந்துள்ளார்கள். 561 பக்கம் கொண்ட இப்புத்தகம், படிக்கக் குளிர்ச்சியாக டிஜிடல் பிரிண்டர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது, விலை ரூ 480/-.(தான்). என்  எழுத்துக்களுக்கு எப்போதும் ஆதரவு தரும் வாசகர்கள் ‘இமாலயன்’ புத்தகத்தையும் வாங்கிப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!!

அன்புடன்

திவாகர்

Pazhaniappa Bros., 25, Peters Road, Royapettah 600014 Ph. 28132863.43408000
Coimbatore "683, Raja Street Phone No,2393704
Tiruchi. Theppakkulam, Phone 2702160
Salem: 77, Cherry Road, Salem Phone No. 2450711
Madurai: 23A, West Gopuram Street, Madurai Phone 2346258
Erode: 959, Broke Road, Erode Phone No,.2256261.

Thursday, July 06, 2017

அமெரிக்காவின் குற்றாலம்


மெல்லினமாம் குழல்வாய்மொழியாள் உடனுறை வல்லினமான 
அருள்மிகு திருக்குற்றாலநாதரே..

குழல்வாய்மொழியாள்.. என்ன அழகான தமிழ்ப்பெயர்.. அகத்தியர் தந்த தமிழ் மண்ணல்லவா.. எங்கள் அம்பிகைக்கும் இனிய தமிழால் பெயர் சூட்டி எங்கள் பெருமைமிக்க குழல்வாய்மொழியாளை இடம்கொண்ட திரிகூடப் பெருமானே..

வணக்கம், 

நலம்.. உன் நலத்தை அறிய விருப்பமும் கூட.. (சாதாரணமாக உன்னை யாரும் நலம் விசாரிக்கமாட்டார்கள்தான்.. இருந்தும் அங்கே தற்சமயம் அரசியல் சமூக சூழ்நிலை அசாதாரணமாக இருப்பதால் எதற்கும் உன்னை இப்படிக் கேட்டுவிடுவது நல்லதுதான் எனத் தோன்றியது..)

இத்தனைநாள் உன் நினைவே எனக்கு வரவில்லை என்பதை நீ நினைவில் வைத்துக் கொண்டு சமீபத்தில் அதை எனக்கும் நினைவூட்டவேண்டும் என்று நீ நினைத்ததால்  என்னை இந்த பொகோனோ மலையின் (Poconos) நடுவிலிருந்து விழும் புஷ்கில் (Bush kill Falls) அருவிக்கு அனுப்பி வைத்தாயோ என்னவோ..

இங்கே பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் புஷ்கில் அருவியைப் பார்த்தபிறகுதான் உன் நினைவே வந்தது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்..

அமெரிக்காவின் வாழ்க்கை உன்னை மறக்கடிக்கிறது என்பது என்னவோ வாஸ்தவம்தான். சட்டதிட்டங்களை மிக நேர்மையான முறையில் வரைமுறையாக்கி அதற்குக் கீழ்ப்படியும் குணங்களையும் மக்களுக்குத் தந்து அத்துடன் எங்கெல்லாம் சட்ட ஒழுங்கும் நேர்மையும் இருந்தால் அங்கெல்லாம் செல்வ வளத்தையும் மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் சேர்த்துக் கொடுக்கும் உன் இன்னருள் எங்கெங்கும் நிறைந்து நிற்கும் இந்த அமெரிக்காவை நான் ‘பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த’ கதையாக பார்த்துக் கொண்டே நாளைக் கடத்திக் கொண்டிருப்பதால் உன்னை நான் நினைக்கவில்லை.. இதுதான் உண்மை என்பதும் உனக்கும் தெரியும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் என்னைப் போன்றோர் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். போகிறார்கள்.. எத்தனையோ பேர் இங்கேயே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள்.. இந்த மண்ணின் வளத்தையும் வனப்பையும் அதிகமாகப் போற்றுகிறார்கள். என்னைப் போலவே வியக்கிறார்கள்.. இந்த சுதந்திர பூமியில் எதையும் செய்வதற்கு சுதந்திரம் கொடுத்திருந்தாலும் சட்டம் ஒழுங்கு நியாயம் நேர்மை உண்மை என்பது உதட்டளவில் கொள்ளாமல் நல்ல விதமாக நடைமுறைப்படுத்துகிறார்களே என்று பாராட்டுகிறார்கள்.. அரசியல் தலைவர்களோ அதிகாரிகளோ ஆட்சி செய்பவர்களோ மக்களுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கிறார்களே என்றெல்லாம் அதிசயிக்கிறார்கள். சாலை அமைப்பையும், இல்லங்கள் அமைப்பையும் சீராக வைத்திருக்கும் கலையைக் கண்டு மகிழ்கிறார்கள், யாரும் யாருக்கும் எப்போதும் அடிமையல்ல என்ற சுதந்திர தாக்கம் எல்லோர் மனதில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அவரவரளவில் மரியாதை தருகிறார்களே என்ற உண்மையை உணர்கிறார்கள்,, தனிமனிதர் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்ற தனித்துவ தத்துவத்தைப் பயின்றுவைத்திருக்கிறார்கள் எனப் புகழ்கிறார்கள். பலமான வல்லரசு என்றாலும் அவர்தம் மக்கள் என வரும்போது அவர்களுக்குப் பயந்து பணிந்து வணங்குகிறார்களே எனவும் பாராட்டுகிறார்கள். தவறாமல் செலுத்தப்படும் மக்களின் வரிப்பணத்தை சீராக மக்களுக்கேத் திருப்பி வசதி செய்துதரும் அரசாங்கத்தை நினைக்கையில் உள்ளம் குளிர்ந்து போகிறது கூட.

வற்றாத கருணைகொண்ட குற்றால நாதரே.. உனக்கு என்ன இருந்தாலும் இந்த அமெரிக்க மக்கள் மீதும் மண் மீதும் கரிசனம் அதிகம்தான். ஆனாலும் சற்று ஆழமாக சிந்தித்தால் உன் கரிசனத்துக் காரணம் புரிகிறதுதான்.. எங்கெல்லாம் தர்மம் சிறக்கின்றதோ அங்கெல்லாம் உன் அபரிமித அன்பு இருக்கும் என்கிற தார்மீகக் காரணம் புரிகிறதுதான்.

அடடா, எந்தக் காரணத்துக்காக இந்தப் பதிவை ஆரம்பித்தேனோ அதை மறந்துவிட்டேனே.. இந்த மண்ணின் வனப்பு அப்படித்தான் மறக்கடிக்கச் செய்கிறது.. அழகான பொகோனோ மலையின் அழகான புஷ்கில் அருவியை மறந்து அமெரிக்காவை புகழ்ந்துகொண்டிருந்தால் எப்படி’..

இந்த அருவியை பென்சில்வேனியாவின் நயாகரா என்று கூட புகழ்கிறார்கள்.  உண்மையாகப் பார்த்தால் அந்த ஒரிஜினல் நயாகரா நீர்வீழ்ச்சி அப்படி ஒன்றும் மிக அழகான இயற்கைக் காட்சி இல்லைதான். நயாகரா அருவி என்பது மிகப் பெரிய அளவில் அகலமாய் வந்து ஆழமாகக் கீழே விழும் பிரும்மானடமான அருவி என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.  இந்தியாவுக்கு தாஜ்மகால் போல அமெரிக்கா வந்தால் நயாகராவைப் பார்க்காமல் போகமுடியாதுதான்..  அதேவேளையில் இங்கே பச்சைப் பசேலென இயற்கை அழகு பொங்க கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும் அருவி எதுவென்றால் நிச்சயமாக புஷ்கில் அருவியைத் தாராளமாகவே சொல்லலாம்.


கோடை வெய்யிலை அப்படியே குளிரவைத்துக்கொண்டு பசுமையை உடலெல்லாம் பூசிக்கொண்டு  உயர்ந்து நிற்கும் பொகோனோ மலையின் நடுப்பகுதியிலிருந்து விழும் புஷ்கில் அருவி என்பது நூறு அடி உயர அருவிதான். பொகோனோ என்றால் இந்த மண்ணின் பழைய பாஷையில் ’இரு மலைகளுக்கிடையே ஓடும் ஓடை’ என்ற பொருளாம். ஏன் இப்படி மலைக்குப் பெயர் வைத்தார்களோ.. மலையைத் துளைத்துக் கொண்டு அதிக அகலமில்லாமல் அளவான முறையில் புஷ்கில் அருவி கீழே பெரும் ஓசையுடன் விழும் அழகு இருக்கிறதே.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சிதான். அங்கேயே அப்படியே அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிடலாம்தான்.

இந்தச் சூழல்தான் அப்படியே எனக்கு குற்றாலத்தின் சூழ்நிலையை என் மனத்தே நிரப்பிவிட்டது...  புஷ்கில் அருவியை குற்றாலத்தில் ஓடும் அருவி போல என் கண்ணுக்கு விருந்தாக நீதான் காண்பித்தாயோ என்றுதான் அந்த வேளையில் நினைத்தேன்.. சுற்றிலும் உள்ள மலைப்பகுதியும், உயர்ந்த பச்சை மரங்களும், மரம் சார்ந்த நிழலும் மலையோடு ஒட்டிய வனப்பும் அப்படியே குற்றாலம்தான் இடம் மாறி இங்கே வந்துவிட்டதோ என்று கூட திகைத்தேன்..

ஏன்.. குற்றாலத்தில் வெவ்வேறு இடங்களில் விழும் அருவிகள் போல இந்த பொகோனோ மலையின் இந்தப் பிராந்தியத்திலும் ஏழெட்டு அருவிகள் கூட உண்டுதான். நீக்கமற எங்கெங்கும் நீ இருக்கிறாய் என்ற தெளிவு இருந்தாலும் உனக்கென குற்றாலத்தில் இருப்பது போல ஒரு கோயில் இங்குக் கட்டப்படவில்லை என்ற குறை உண்டு. ஆனால் இன்னொரு வகையாகப் பார்த்தால் கோயில் என்றெல்லாம் எதற்கு.  நீயே அருவியாக, மலையாக, மரமாகக் கண்ணுக்குத் தெரியும் போது உன்னை எதற்குக் கருவறையில் பூட்டி வைக்கவேண்டும் என்ற ஏடாகூடமான கேள்வி கூட மனத்தில் எழுந்ததுதான். குற்றாலத்தில் அருவி விழும்போது அங்கே தைரியமாகக் குளிக்க அனுமதி உண்டு ஆனால் இங்கே இந்த புஷ்கில் அருவியைப் பராமரிக்கும் கம்பெனியார் பயப்படுகிறார்களோ என்னவோ யாரையும் தண்ணீர் விழும் இடத்தில் குளிக்க அனுமதிப்பதில்லை. சில வகையான பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு சரியான இடத்தில் குளிக்க வசதியும் செய்து தரலாம்தான். நயாகரா போன்று அபாயகரமான இடம்  இது அல்ல என்று தெளிவாகத் தெரிந்ததால் அப்படி நினைத்தேனோ என்னவோ..

பொதிகைமலை எனும் அழகுதமிழ்மலையில் அமிர்தம்போல அருவிகளை விழவைத்து வேடிக்கைக் காண்பிக்கும் திருக்குற்றாலநாதரே! இந்த புஷ்கில் அருவியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது உன் பெருமையைத்தான் கொஞ்சம் கூடவே நினைத்துக் கொண்டேன். காரணத்தைச் சொல்கிறேன்.

புஷ்கில் அருவியை சுற்றியுள்ள வனத்தை வளைத்து பாதுகாப்பு வளையம் கட்டி சுற்றுலா தலம் போல தரம் உயர்த்தி,  உள்ளே அழைத்துச் செல்ல பாதை வகுத்து ’கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை மற்றவர்களுக்குக் கண்காட்சியாகக் காட்டுவது போல’ கீழே விழும் அருவியை காட்டிவிட்டு பிறகு அவர்களை வெளியே அனுப்பும்போது ’ஆஹா எப்படிப்பட்ட இயற்கை ஆனந்தம் பெற்றோம்’ என்கிற அனுபவத்தில் வந்தவர்கள் முகத்தில் ஆச்சரியத்தைப் புகுத்தி அனுப்புகிறார்கள்.  இந்தக் குறிப்பிட்ட இடத்தை விட்டால் வேறெங்கிருந்தும் இந்த அருவியைக் காண முடியாதுதான். ஆனால் இந்தக் குறிப்பிட்ட இடத்துக்குள் நுழைய இதற்கென ஒரு விலையுண்டு.  வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஐம்பதினாயிரம் டாலர் வரை டிக்கெட் மூலமாகவே வசூல் செய்து விடுகிறார்கள். விலை கொடுத்து இயற்கையாகக் கிடைத்த அழகைப் பார்க்க வைக்கிறார்கள்.. மேலேயிருந்து கீழே விழும் அருவியின் இடத்திலிருந்து மறுபடியும் மேலே ஏறிச் சென்று சற்று களைப்போடு வருபவர் இளைப்பாற எலுமிச்சை நீரைப் பருகத் தருகிறார்கள் – எலுமிச்சை நீர் ஐந்து டாலர்தான்.


அமெரிக்காவின் குற்றாலம் என்று சொல்லிவிட்டோமே, ஆனால் நம் குற்றாலத்தில் இப்படியெல்லாம் உண்டா.. என்று மனதுக்குள் கேட்டுப் பார்த்தேன்.. சிரிப்போடு நீதான் வந்தாய்..  அந்தக் குற்றாலத்தை மனக்கண்ணே காண்பித்தாய். அங்கே அருவி கண்ணுக்கு அழகான விருந்து. குளியல் உடலுக்கு நோய் தீர்க்கும் மருந்து.. நேரம் காலமறியாமல் அருவி விழுவதை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம்.. குழல்வாய்மொழியாளோடு நீ குலாவுவது போல அருவியில் குதூகலித்துக் கொண்டே குளிக்கும் காதலர்களை ரசிக்கலாம். பாவைகளின் ஓரவிழிப் பார்வைக்கு ஏங்கியபடியே பாறைகளின் மத்தியிலே  அருவியின் தண்ணீர் பாய்ந்து வழுக்கி விழும் வாலிபர்களைக் காணலாம். ’ஹோ’வென சப்தத்துடன் கீழே விழும் அந்த அருவியின் ஓசையோடு இயைந்து அகத்தியரின் அழகான தமிழில் குற்றாலக் குறவஞ்சி பாடலாம். இயற்கையோடு இயற்கையாக வாழ்க்கையை பாவிக்கும் யோகியரை வணங்கலாம். போக்கும் வரவும் இல்லா புண்ணியனாய் வண்ண வண்ணச் சித்திரங்களாய் ஆடிக்கொண்டிருக்கும் உன் சித்திரசபையைக் கண்ணார தரிசிக்கலாம். கோலமயில்கள் தோகை விரித்தாடும் காட்சியைக் கண்டு பொறாமையோடு பாடும் கானக் குயிலோசை கேட்கலாம். கோயிலுக்குள் வந்து இத்தனையும் இலவசப் பரிசாகக் கொடுத்த உன்னைக் கண்டு தரிசித்து மகிழலாம்.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூட பாடலாம்தான்..

பி.கு : முதலும் முடிவுமில்லா திரிகூடமலை இறைவா.. உன்னருளால் விரைவில் வரவிருக்கும் என்னுடைய புதிய புதினத்தில் இந்த அருவிதான் முதலும், முடிவும் என்பதையும் குறித்துக் கொண்டு வாசகர்களிடம் சேர்க்கவும்.

நன்றியுடன்
உன் திவாகர்.


First two pictures - Bush Kill Falls, PA
Last one : Main Falls Thirukutralam.

Friday, December 30, 2016

லண்டனில் திருவள்ளுவர்

அன்புள்ள விஓவி குடும்பத்தாருக்கு,

வணக்கம்.



சென்னையில் பாலா அவர்களின்  நாட்டுக்குறள் பாட்டு வெளியீடு விழாவும், ஈரோட்டில் சங்ககிரி சகோதரி ஹெலனா எழுதிய வள்ளுவம் பற்றிய புத்தக வெளியீடு விழாவும் சிறப்பாக நடந்தேறியது கண்டு மகிழ்ந்தேன். இரண்டு விழாக்களிலும் பெரிய அளவில் நம் வள்ளுவ குடும்பத்து அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும் தலைவர் சி.ரா அவர்களும் சென்னையிலே வந்து குடியேறிவிட்டது ரெட்டிப்பான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான்.

இந்தக் கடிதம் முழுதும் திருவள்ளுவரின் சிலை பற்றியதுதான் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன். அதுவும் லண்டன் திருவள்ளுவர் சிலை பற்றிய விஷயம் என்றால் சாதாரணமானதல்ல என்பதால் உடனடியாக இந்தக் கடிதத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995 இல் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் தஞ்சையில் நடந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இந்த மகாநாட்டினை லண்டன் மகாநகரத்தில் நடத்தத்தான் திட்டமிட்டிருந்தார்களாம். அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனிலிருந்து தஞ்சைக்கு மாற்றப்பட்டதாம். இருந்தாலும் லண்டனுக்கு தமிழக அரசால் ஏதாவது தமிழ் சார்பாக செய்யவேண்டும் என்று கோரப்பட்டதால் லண்டனில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை அன்பளிப்பாக அமைக்க ஒப்புக்கொண்டதாக மாநாட்டிலேயே சொன்னார்களா. (மாநாட்டில் சொன்னார்கள் என்பது உறுதி செய்யப்படவேண்டும்தான். கலிபோர்னிய ராஜம் அம்மா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்களை கேட்கிறேன்) ஆனால் கொடுத்த வாக்கினை உடனடியாக செல்வி ஜெயலலிதா காப்பாற்றியதோடு அந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
லண்டன் நகரத்தில் மட்டமத்தியில்  உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின்  எஸ் ஓ ஏ எஸ் - (ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிகன் ஸ்டடீஸ்) வளாகத்தில் இந்த சிலை வைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட, 1996 ஆம் ஆண்டு மே மாதம்  அங்கே ஒரு மரத்தின் கீழே பீடம் செய்து அந்த மரத்து நிழலில் நம் வள்ளுவரை அழகாக உட்கார வைத்துவிட்டார்கள். ஆடம்பரம் இல்லை.. கோலாகலம் இல்லை. மிக எளிமையான முறையில் அன்றைய இந்தியத் தூதர் சிங்க்வி தலைமையில் மொத்தம் பத்து பேர் கலந்துகொள்ள திருவள்ளுவர் ஹாயாக மரத்தின் கீழே அமர்ந்து விட்டார் என்று ஸ்வாமிநாதன் தெரிவித்தார்.

அடடா, நம் லண்டன் ஸ்வாமிநாதன் பற்றி இன்னமும் ஓன்றுமே சொல்லவில்லையே.. தங்கத்துக்கு மறு பெயர்தான் லண்டன் ஸ்வாமிநாதன். தமிழுக்கு இந்த லண்டன் மாநகரத்திலே பல சேவைகளை செய்துகொண்டு வருபவர் திரு ஸ்வாமிநாதன். பிபிசிக்காக 1987 இல் லண்டன் வந்தவர் தமிழ் அவரை நன்றாக பயன்படுத்திக்கொண்டதுதான். மாயவரத்தைச் சேர்ந்தவர் மதுரை புலம் பெயன்று அங்கிருந்து லண்டன் மாநகரத்துக்கு வந்து சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தொண்டு செய்கிறார். இன்னமும் கூட வகுப்புகள் எடுத்துக்கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் இவரின் மேலான ஆலோசனைகளைக் கேட்டு தமிழ்ச் சேவைகள் புரிகின்றன. தமிழ் இலக்கியங்கள் மேல் இவருக்குள்ள ஆழ்ந்த பற்று அவரை பல சமயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும். மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்குறளும் இவரை வெகுவாகக் கவர்ந்தவை.   
கம்பராமாயணமும் பெரியபுராணமும் கூட அவர் மாணவச் செல்வங்களுக்கு  கற்றுத் தரும் இலக்கியங்கள்தான்.இவரோடு பேசப் பேசத்தான்  இவரிடம் தமிழ் பயிலும் மாணவர்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள்தான் என்பதை நாம் உணரலாம்.. 

இதற்கும் மேலாக இவரின் வலைப்பூக்கள் ஏராளமான வாசகர்களை இவரிடம் ஈர்த்தவை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் 1996 இல் இந்த இடத்தில் நடந்த திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பத்து பேரில் இவரும் ஒருவர். ஆகையினால்தான் நான் லண்டன் திருவள்ளுவரைச் சந்திக்கவிரும்பிய போது திரு ஸ்வாமியுடன் செல்லவேண்டுமென அவருடன் தொடர்பு கொண்டேன். மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்று திருவள்ளுவரை அங்கே அறிமுகம் செய்தார். அங்கே சென்றவுடன் சில திருக்குறள்கள் ஓதினோம். நெஞ்சுக்கு நிம்மதி.
நாங்கள் சென்றபோது யாருமில்லைதான். ஆனால் எங்கள் பின்னாலேயே ஒரு இசுலாமியக் குடும்பம் அங்கே வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. ஈராயிரம் வருடங்களுக்கு முன் பிறந்து உலகுக்கு இந்த உலகமக்கள் உய்ய திருக்குறளைப் பரிசாகத் தந்த முனிவர் என்று அவர்களுக்கு எடுத்துச் சென்னார். வந்தவர்களின் ஆர்வம் கூடியதை அவர்களின் முகக்குறிப்பே எங்களுக்குச் சொன்னது.

எத்தனைதான் பல்கலைக்கழக திறந்தவெளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இருந்தாலும் யாராலும் பராமரிக்கமுடியாத சூழ்நிலையில் இருந்தது அந்த இடம். இப்போது குளிர்காலம்.. அவர் அமரந்த இடத்தில் இருந்த மரத்தில் இலைகளெல்லாம் விழுந்து விட்ட காலகட்டம். பறவைகளே அரிதாக வசிக்கும் கால கட்டமும் கூட. அதனால் சற்று சுத்தமாக இருந்ததுதான். ஆனால் கோடை வர ஆரம்பித்து இலைகளும் துளிர்விட ஆரம்பித்துவிட்டால் மீண்டும் பறவைகள் வாசம் செய்ய ஆரம்பிக்கும். இதனால் திருவள்ளுவருக்கு சில கஷ்டங்கள் அங்கே உண்டு. பறவைகளின் எச்சங்கள் அவர் மேனி மீது விழுந்து அசுத்தப்படுத்த அந்த காய்ந்து போன எச்சங்களை பலவருடங்களாய் அகற்றாமல் இருந்ததால் லண்டன் பல்கலைக்கழக நிர்வாகம் சுத்தம் கருதி திருவள்ளுவரையே சென்றவருடம் இங்கிருந்து அகற்றி எடுத்து உள்ளே வைத்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் சுத்தம் செய்து இந்த வருடம் ஜூன் மாதத்தில் வைத்தாலும், மறுபடியும் கோடையும் வரும், பறவைகளும் வந்து ம்ரத்தில் குடியேறும். மறுபடியும் எச்சங்கள் வருவதும், அவர் மேல் விழுவதும்,அதனை அகற்றமுடியாமல் காலத்தைப் போக்குவதையும் தடுக்க முடியாது. 

திருவள்ளுவரை வேறு இடத்துக்கு மாற்றவும் முடியாது. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்திலேயே அவரைச் சுற்றி கம்பிகளும், தலைக்கு மேலே கூரையும் வைக்க ஆறாயிரம் பவுண்ட் எஸ்டிமேட் ஒன்று போடப்பட்டுள்ளதாக திரு ஸ்வாமி தெரிவித்தார். பல்கலைக் கழக நிர்வாகம் செலவு செய்யாவிட்டாலும் இதற்கான பணத்தைச் சேர்ப்பது ஒன்றும் கடினமல்ல என்று ஸ்வாமி தெரிவித்தார். ஆனால் கோடை வருவதற்குள்  இந்த வேலை முடியவேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டுதான். தமிழ்மக்கள் அதிலும் லண்டன் வாழ் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை நல்கிடவேண்டும். விரைவில் திருவள்ளுவர் சிலை பொலிவுடன் இருப்பதற்கான ஆயத்தங்களைத் தொடரவேண்டும். 

திருவள்ளுவரின் குறளைப் பரப்பினால் போதாதா, சிலை வைத்துதான் என்ன ஆகப் போகிறது என்று தோன்றலாம். சிலை வைப்பதில் சிரமம் கூட இருக்கிறது. சிலை வைத்தால் அவர் நிற்பது போலா, அமர்வது போலா, அல்லது அவருக்குத் தாடி இருக்கிறது என்று எப்படி ஊகிக்கமுடிந்தது. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று முழங்கியவருக்கு தாடி எதற்கு, என்றெல்லாம் கேள்வி எழும்பும்தான். 

ஏற்கனவே விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்தவன். ஏன் சிலை வேண்டுமென்றால் எதிர்கால குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும்.. இப்படி ஒரு மனிதர் அந்தக் காலத்தில் தமிழகத்தில் உதித்து. உலகத்துக்கே நல்வழி காட்ட திருக்குறள் எழுதி அந்த நல்வழியைத் தந்தார் என்று சிலைகளை முன் வைத்து திருக்குறளின் பெருமையை எதிர்காலத்தவர் கருத்தில் ஏற்ற வேண்டும்... சிலை ஒரு கருவிதான், ஆனால் அதன் பின்னே ஒளிந்திருக்கும் உண்மையான கருத்து உன்னதமான கருத்தல்லவா.. 

லண்டனில் பாராளுமன்றத்துக்கருகே பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் உதித்த உலகத் தலைவர்களை சிலைகளாகச் செய்து சுற்றுலாக்காரர்களைக் கவர்கிறார்கள். காந்தி, சர்ச்சில், மாண்டெலா போன்றவர்களை பொதுமக்கள் பார்வையிடும்போது அவர்கள் உலகத்துக்குச் செய்த சேவைகள் நினைவுக்கு வருகின்றன என்பது உண்மைதானே. திருவள்ளுவரோ இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர் என்பதை உலகமெலாம் உணரவேண்டும். அவர் எழுதிய திருக்குறள் வழியைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பதுதானே நம் எல்லோர் விருப்பமும் கூட..

இதனிடையே பனி படர்ந்த லண்டன் மாநகரத்து ஈரவீதிகளில் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே நடந்து செல்வது கூட ஒரு தனி இன்பம்தானே... அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல..

அன்புடன் 

உங்கள் குடும்பஸ்தன்.
திவாகர்.















Friday, April 15, 2016

சீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் கேள்விகளும்.



இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோட்டம் உண்டு. என் நாடகம் ஒன்றில் சீதை அக்கினியில் குளிப்பித்தது என்பது கதாநாயகனாகிய இராமன் தன்னை ஒருபடித் தாழ்த்திக் கொண்டு தன் அருமை மனைவியின் புகழ்பரப்பச் செய்யத்தான், என வசனம் எழுதினேன். கலிஃபோர்னியா வாசியும் என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பேராசிரியை ராஜம் அம்மா இதைப் படித்துவிட்டு அவர்கள் சில கேள்விகள் எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலாகத்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். படியுங்கள். போகப் போக விவரங்கள், கேள்விகள் புரியும்.
                                                                       ************

அன்புள்ள ராஜம் அம்மா!

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. பொதுவாக ராம நவமியன்று ராமரைப் பற்றி எழுதுவது சில வருடங்களாக வழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன். காரணம் அந்த ஒரு நாளாவது ஸ்ரீராமன் நினைவில் சில மணித்துளிகள் செலவழிக்கலாமே என்றுதான். ஆனால் இந்த ராமநவமியன்று அவன் திருவுளம் வேறாகியுள்ளது என்பது உங்களின் கடிதம் மூலம் நிரூபித்துள்ளான். ’அவனை அதிக நேரம் நினை மனமே’ என்று போதித்துள்ளான். அவன் எப்போதுமே அப்படித்தான். 

உங்கள் பதிவில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு ஒவ்வாததாக குறிப்பிட்டுள்ளீர்கள். 
1. சீதையை அக்கினியில் குளிப்பித்து அவள் கற்பின் மீது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது (!)
2. கர்ப்பஸ்திரீ சீதையை அடவிக்கு அனுப்பி ஒரேயடியாக தள்ளிவைத்தது.

இது பற்றியெல்லாம் நான் புதிதாக என்ன பதில் சொல்வது.. ஆனால் கொஞ்சம் பொறுமை கொண்டு நீங்கள் படித்தால் ஏதேனும் புதிய விஷயம் கிடைக்கலாம். மேலும் ஒரு கோரிக்கை. தயை செய்து திறந்த மனத்துடன் இதைப் படிக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தவறு என அந்தத் திறந்த மனதுக்குப் பட்டால் நீங்கள் உரிமையோடு என்னைக் கண்டிக்கலாம். சரியென்று பட்டாலும் சொல்லி விடுங்கள். உங்கள் தமிழுக்கும், தனிப்பட்ட முறையில் உங்கள் பண்பான உணர்வுகளுக்கும் நான் அடிமை. இப்போது இதை எழுதும்போது யாருக்குப் பதில் எழுதுகிறோம் என்பதை நினைத்துக் கொண்டே ‘ கொஞ்சம் அடக்கி வாசி; என என் அடிமனது கண்டித்துக் கொண்டே இருக்கிறது.

சீதையின் அக்னிப்பிரவேசம்:

தமிழ் மண்ணில் கடந்த ஐம்பதாண்டு காலமாக எத்தனையோ கணக்கிலடங்கா பட்டிமன்றங்களில் இந்தச் செய்திகள் மிகப் பெரிதாக வாதாடப்பட்டுள்ளன.. இந்தப் பட்டி மன்றங்களில் சீதையின் பரிதாபநிலை கேட்டு அவளுக்காக மருகி அழுதவர் பலபேரைப் பார்த்திருக்கிறேன். ஏன் நானே சில சமயங்களில் ஸ்ரீராமன் மீது கோபம் கொண்டுள்ளேன். ஆனால் அப்படிப் பேசியவர்கள் வேறு இடங்களில் ஸ்ரீராமனுக்கு ஆதரவாகவும் சீதை அக்கினியில் குளிப்பித்தது சரிதான் என்று கூட மாறிப் போய் பேசுவர். அடக் கடவுளே.. அப்படியானால் தமிழ்ப் பேச்சாளர்களின் மகிமையினால்தானா இந்தப் பிரச்சினை இத்தனைப்பெரிதாக எழுகிறது என்று கூட நினைப்பேன். அதுதான் உண்மையோ என்னவோ என்று பல சமயங்களில் தோன்றும். பல புத்தகங்கள், பல கவிதைகள் அக்கினிப்பிரவேசத்தால் மெருகேறியுள்ளன. சீதை மட்டும் அக்கினிப் பிரவேசம் அன்று செய்திராவிட்டால் பல கவிஞர்களின் கற்பனை வறண்டு போயிருந்திருக்குமோ என்று கூட தோன்றும். ஏனெனில் தெலுங்கு நாட்டில் இதைக் காணவில்லை. அங்கெல்லாம் ராமபக்தி மட்டும்தான் உண்டு.

எனக்கு மூதறிஞர் ராஜாஜியை அவருடைய கடைசிகால கட்டத்தில் அடிக்கடி (தினந்தோறும் குடிநீருக்காக மதிய வேளையில் - பள்ளிக்குப் பக்கத்து வீடு) சந்திக்கும் பேறு கிடைத்தது. அவை பள்ளி நாட்கள். பள்ளிக் கல்வி முடியும் போது மாணவர்களான எங்கள் நால்வருக்கு அவர் எழுதிய பழைய புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். எனக்குக் கிடைத்தது அவர் எழுதிய ராமாயணம் ஆங்கில நூல். அப்போது உடனடியாக படிக்கவில்லை.. ஆனால் பாதுகாத்து வந்தேன்.விஜயவாடா சென்ற பிறகுதான் ஒருநாள் சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதை முடிக்கும்போது ராஜாஜியின் வரிகள் ‘ஐய்யோ ராமகாதையின் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டேனே’ என்று மனமுருக அவர் எழுதி ராமபட்டாபிஷேகத்தினை முடித்திருப்பார். கடைசியில் முத்திரை வரிகளாக எத்தனைதான் ஸ்ரீராமன் மகாபுருஷனாக செயல்பட்டு அத்தனை அசுரர்களையும் அழித்து லோககல்யாணம் செய்திருந்தாலும் அவன் சீதை அக்கினி பிரவேசத்தின் போது நடந்துகொண்டது எனக்குப் பிடிக்கவில்லைதான்’ என்று எழுதியிருப்பார்.

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அவர் கருத்தில் ஈடுபாடுகொண்டு, இராமன் செய்தது சரிதானா என்று  மனம் ஒருபக்கத்தில் வலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல வால்மீகி ராமாயணத்தைப் பலபேர் சொல்ல பலதடவை கேள்விஞானம் பல விஷயங்களில் பெற முடிந்தது. கம்பராமாயணப் புத்தகங்கள் வாங்கினோம். நண்பர்களுடன், பெரியவர்களுடன் விவாதித்தோம்.. கம்பர் வால்மீகியை விட தீவிர ராமபக்தர். அவர் கருத்தும் மனதுக்குள் விவாதிக்கப்பட்டதுதான். அக்கினிப்பிரவேசம் சரிதானா, அது ஏன் நடத்தப்படவேண்டும்..

ராமகாதையில் ஒவ்வொரு நாளும்நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் வால்மீகி எழுதவில்லைதான். இப்படி எழுதாத வால்மீகி வெகு எளிதாக சீதையின் அக்கினிப் பிரவேசத்தையும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல் யுத்தம் முடிந்தவுடன் சுக்ரீவனுக்கு பட்டம் கட்டினோமா, அயோத்தி திரும்பினோமா என்று அவர் நிகழ்வைக் கொண்டு சென்றிருக்கலாம். இதனால் சீதையின் இந்தக் கட்டமே தெரியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.. 

நன்றாக இந்த இடத்தில் சில விஷயங்களைக் கவனிக்கவும்..

#அதாவது சீதையின் கற்பு விஷயத்தில் அந்த யுத்த களத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்று சீதையை விடுவித்து அழைத்துச் செல்லும் கதாநாயகனை அவ்விடத்தில் கேள்வி கேட்போர் யாரும் இல்லை. ஸ்ரீராமனையே அதுவும் அந்த அசகாய சூரனை ராவணனை அவன் பத்துத் தலைகளையும் அறுத்த இடத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்பதா.. அது முடியுமா? 

#சீதையின் ஸ்ரீராமபக்தி அதாவது பதிபக்தி கேள்விக்கு அப்பாற்பட்டதாக கதையின் மொத்தக் கட்டத்திலும் சொல்லப்பட்டது. குறிப்பாக  சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையைத் தான் மீட்டுச் செல்வதாக வரும் கட்டத்திலும், இராவணன் அசோகவனத்தில் கண்டு தன்னை ஏற்றுக் கொள்ளும்படிக் கெஞ்சும் கட்டத்திலும் சீதையின் பதிபக்தி மிக அதிகமாகத் தெரியவரும். தன்னை மீட்டுச் செல்வதாகச் சொன்ன அனுமனை மென்மையாகக் கண்டிப்பாள்., அசுரனையோ துச்சமென மதித்து ஏசுவாள். இராமனின் கையில் ஏற்படப்போகும் ராவணனின் முடிவை அவனுக்கு முன்பே தெரிவித்தவள் சீதை. இதையெல்லாம் அந்த இடத்தில் நேரடியாகக் கவனித்த அனுமன் பின்னாட்களில் - அதாவது யுத்தத்துக்கு செல்லுமுன்னர் - இராமனிடம் தெரிவித்தும் இருப்பான் அல்லவா.. சீதையின் பரமபக்தனாக மாறியவனாயிற்றே..

சுந்தர காண்டத்தில் அனுமனுக்கு சீதையே சொல்லும் காகாசுரனின் கதையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
வனவாசத்தின் போது வனத்தில் ராமன் சீதையின் மடியில் தலைசாய்த்து நிம்மதியாக உறங்கும் நேரத்தில் காக்கை ஒன்று சீதையின் மார்பகத்தைக் கொத்துகிறது. ஆனால் சீதைக்கு எங்கே தன் கணவன் உறக்கம் தெளிந்து எழுந்துவிடுவானோ என்ற கவலையினால் அந்த வலியைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனாலும் காக்கைக் கொத்தக் கொத்த மார்பகத்தின் ரத்தம் ஸ்ரீராமன் மீது பட அவன் எழுந்துகொள்கிறான். கோபம் கொண்டு காக்கையை ஓட ஓட விரட்டுகிறான். கடைசியில் காக்கை சீதையின் காலடியில் வந்து வீழ்கிறது. இரக்கம் காட்டுகிறாள் சீதை. இங்கே ஸ்ரீராமனின் கோபத்தைக் காணவேண்டும்.ரௌத்ரமூர்த்தியாக மாறுகிறான். சீதைமேல் அவன் கொண்ட காதல் இப்படியெல்லாம் அவனை மாற்றுகிறது. அப்படிப்பட்ட ஸ்ரீராமன் வந்து தன்னை மீட்டு அழைத்துச் செல்லும் வரை காத்திருப்பதுதான் ஒரு பத்தினிக்கு அழகு என்கிறாள் சீதை.

ஆகையினால் இந்த ராமாயணக் காதையில் சீதையின் கற்புக்காக அக்கினிப் பிரவேசம் என்ற ஒன்று தேவையே இல்லை.சரி அப்படியே நடந்திருந்தாலும் வெற்றிவீரன் ராமனின் புகழுக்குக் களங்கம் ஏற்படும் விதத்தில் இதை ஏன் வால்மீகி எழுத வேண்டும்.. தேவை இல்லையே.. . 

ராமன் மானிடனாக அவதாரம் செய்தான். மானிடனாக கல்வி,  வீரம் கற்றான். முனிவர்களை அவர்கள் துயரிடமிருந்து காப்பாற்றினான். யாரும் முறிக்கமுடியாத வில்லை முறித்து சீதையைக் கைக்கொண்டான். பின்னர் மாற்றாந்தாய்க்காகக் காட்டுக்குச் சென்றான். காட்டு வாழ்க்கையை அனுபவித்த சமயத்தில் சீதையைப் பறிகொடுத்து கோபம்கொண்டு வானரர் படை துணைக்கொண்டு அசுரனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் சூட்டிக் கொண்டான்.

ராஜம் அம்மா!.. இந்த நான்கரை வரியில் இராமாயணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் விவரித்தால் ராமனின் வீர தீர பராக்கிரமங்களையும் விரிவாகப் பேசினால் ‘சீவகசிந்தாமணி’ அளவில் சீவகனின் வீரதீரசாகசத்தைப் போல ஒரு சிறு காவியமாகப் படைக்கலாம். அவ்வளவுதான். ஆனால் காலாகாலத்துக்கும் பேசப்படும் ராமாயணத்தை அப்படி எழுதவில்லை. அதற்கு ஆதிபெயர் சீதாயணம். சீதை எனும் துயர்மிகுந்த  பெண்ணின் கதை இது. அவள் துயரம் மிகத் தெளிவாகப் பரவ வேண்டும். அவள் செய்த தியாகம், ஸ்ரீராமன் மேல் கொண்ட பற்று, பாசம், காதல் அதற்கும் மேலே ஸ்ரீராமனே தன்னை விடுதலை செய்து மீட்டு அழைத்துச் செல்வான் என்ற நம்பிக்கை. சுந்தரகாண்டம் முழுவதும் அவள் புகழ்தான், அவள் மேன்மைதான் பேசப்படுகிறது. சீதையை ஆசைகாட்ட,ராவணன் அவள் தந்தை போல மாறி அசோகவனத்தில் வருகிறான். ராவணனை மணந்துகொள் என்று அறிவுறுத்திய ஜனகனை தந்தையென்றும் பாராமல் ஏசுகிறாள். எப்படிப்பட்ட பதிபக்தி இது என்று ராவணனே மயங்குவதாகக் கூட வால்மீகி எழுதுவார்.அப்படிப்பட்டவள் தன் தூய்மையை நிரூபிக்க அக்னியில் குளிக்கவேண்டுமாம்.

அப்படியானால் ராஜாஜியும் ராஜம் அம்மாவும் சொன்ன கருத்து நியாயமாக இருக்கிறதே என்று கேட்கத்தான் தோன்றும். ஆனால் தீர ஆராய்ந்து பார்க்கும்போது இவர்களும் இருவரும் எத்தனைதான் தெளிவாக, ஞானிகளாக இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட கருத்தை ஓர் சார்பு முறையாகத்தான் பார்த்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் எதிர்த்துப் பதில் சொல்லும் நான் இவர்கள் இருவரை விட நான் ஞானம் மிகுந்தவனா என்றால் நிச்சயம் இல்லை.. 

உங்கள் கேள்விக்கு வருகிறேன். 
//ஆகா, ஆகா, அக்னிக்கும் ராமனுக்கும் சீதைக்கும் இடையே ஒரு mutual agreement இருந்திருந்தால் ... கல்ச்சரோ காவியப்படைப்பாளனோ ஏன் ராமனைத் தீக்குள் அனுப்பவில்லை? குளூகுளூ என்ற தீயில் அவன் புகுந்து புறப்பட்டிருந்தால் ... ? தீக்குள் அனுப்பப் பெண் என்பவள்தான் கிடைத்தாளோ? வாய்பேசமுடியாத விலங்குகளையும் வாய்பேசும் உரிமையில்லாத பெண்களையும் தீக்குள் அனுப்பிய சமூகத்தின்மேல் எனக்கு மதிப்பில்லை. சீச்சீ என்றுதான் உதறுகிறேன்//

கணவன் மனைவியாக ஸ்ரீராமனும் சீதையும் இந்த மண்ணுக்காக நிகழ்த்திக்காட்டிய ஒரு நிகழ்ச்சிதான் அம்மா.. ஸ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. ஆனால் அவ்ள் தீக்குளிக்கையில் ஏதும் பதில் பேசவில்லை. ஏனெனில் அவனுக்கும் தெரியும் சீதைக்கும் தெரியும் அக்கினிக் குளியலும் அருவிக் குளியலும் அவர்களுக்கு ஒன்றே. இதை அனுமனும் அறிந்ததால்தான் அங்கே மௌனம் சாதிக்கிறான். இது கணவன் மனைவி பிறருக்காகவோ அவர்களுக்காகவோ விளையாடியது போலத்தான். 

ராஜம் அம்மா, நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்.. அதற்கு தயை கூர்ந்து பதில் தரவேணும்.

1.சீதை தானும் காட்டுக்கு வருவதாக ராமனிடம் விண்ணப்பிக்கும்போது ராமன் வேண்டாமென்று மறுக்கிறான். ஒரு பெண் தன்னோடு துயரத்தை அந்த அடவியில் பங்கு கொள்ளவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதை ராமனைக் கடிந்து கொள்கிறாள்.  இராமனை ‘பேடி’ என இகழ்கிறாள்.
கேள்வி - சீதை இப்படி வாய்க்கு வந்தபடி சொல்லலாமா? நல்ல எண்ணத்தில் சொல்லப்பட்ட அந்த மறுப்புக்கு இதுதான் பதிலா?

2.. பொன்மானைக் கண்டதும் தனக்காகப் பிடித்துத் தரும்படி கேட்கிறாள் சீதை. கேட்பதில் தவறில்லை.. ஆனால் இளவலைக் காவல் வைத்து செல்கிறான் ராமன். ஆனால் ‘லட்சுமணா’ என்ற கூவல் கேட்டுப் பதறும் சீதை லட்சுமணனை அனுப்ப, அவன் அண்ணன் கட்டளையிட்டதற்காக அங்கேயே இருப்பேன் என்று மன்றாடுகிறான். ஆனால் சீதை கேட்கவில்லை.. அவனை நா கூச திட்டுகிறாள்.. அவன் நடத்தையையே சந்தேகிக்கிறாள்.
கேள்வி - இப்படியெல்லாம் எல்லாமறிந்த சீதை இளவலைத் திட்டலாமா? கணவன் சொல்படிதானே காவலுக்கு அங்கேயே நிற்கிறான்?.

3. இளவல் வேறு வழியில்லாமல்  கோடு கிழித்து காப்பு வைத்துவிட்டு செல்லும்போது ராவணசந்நியாஸி பிட்சை கேட்கும்போது தன் நிலையும் தர்ம நெறி பலவும் தெரிந்த சீதை, எத்தனைதான் சந்நியாஸி கோட்டைத் தாண்டி வரச் சொன்னாலும், கோட்டைத் தாண்டிச் செல்லலாமா? 

அறியாமல் செய்தால் அது தவறு. அறிந்து செய்தால் அது தப்பு. சீதை ஏன் இந்தத் தப்பை அறிந்தே செய்யவேண்டும்?

ஆனால் மேற்கண்ட மூன்றும் இல்லாமல் இருந்தால் இராமாயணம் என்பதே வந்திருக்காது என்கிற தெரிந்த பதிலைச் சொல்லவேண்டாம். எனக்குத் தெரியவேண்டியது, நீங்கள் சொன்னீர்களே ‘வாய் பேச முடியாத பெண்’ என்று. அந்தப் பெண் சீதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்.

4. சுந்தரகாண்டத்தில் அனுமன் வாலுக்குத் தீயிட்ட சங்கதியையும், லங்கா நகரம் தீயில் அழிவதையும் லங்கிணிகள் பயந்துகொண்டே சீதையிடம் சொல்லும்போது, சீதை சொல்கிறாளே ‘ராமன் என்கிற கணவனின் பத்தினியாகிய நான் சொல்கிறேன். அக்னி தேவா, அனுமனுக்கு உன்னால் அந்தத் தீங்கும் நேரக் கூடாது,”
கேள்வி - அக்னி தேவன் அப்படியே செய்கிறான்.. அதெல்லாம் இருக்கட்டும் அக்னி தேவன் ஏன் அப்படி செய்யவேண்டும்? 

ராஜம் அம்மா, பதில் தாருங்கள். இந்தப் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. 

அடுத்த கேள்வி: 
//வயிற்றில் உண்டான கருவுக்காக மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓர் அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தபின் சீதை உயிரை மாய்த்துக்கொண்டதைப் போற்றும் சமுதாயம் இது. 4. நான் எழுதினால் ... அரசாளும் ஆணவம் பிடித்த அப்பனுடன் பெற்ற பிள்ளைகளை அனுப்பிவிட்டு ... அனாதை ஆசிரமத்தில் அமைதியாகப் பொழுதுபோக்கும் சீதையை உருவாக்குவேன்.//
ஸ்ரீராமனுடன் சீதா தேவி மிகுந்த சந்தோஷமான நாட்களை வனத்திலும், அதன் பின் ஏற்பட்ட ராவணவதத்துக்குக்கப்பாலும் அயோத்தியில் சில காலமும் கழித்தவள். சீதையின் சரித்திரத்தின் ஆரம்பமே சூசகமாகத்தான் நமக்குத் தெரிவிக்கிறது ராமாயணம். அவள் ஸ்ரீராமனைப் போல பிறந்தவளா.. இல்லை பிறப்பே இல்லாமல் பூமியில் கிடைத்தவளா.. அவள் யார்? ஸ்ரீலக்ஷ்மியின் அவதாரமா, பூதேவியின் மறு உருவா? அல்லது சாட்சாத் சிவபெருமானே பெண்ணின் தன்மை இத்தகையது என்றறிய (இப்படி ஒரு கதையும் உண்டு) சீதாவாக அவதாரம் எடுத்தானா.. சீதையின் தாய் தந்தையர் யார் என்கிற கேள்விகளுக்கு வால்மீகி ராமாயணத்தில் நான் கேட்ட வரை மிகச் சரியான தகவல்கள் இல்லை.
 
அவள் வரவைப் பற்றி கம்பன் வர்ணனை திருமகளாக இருந்து மணமகளாக வரும்போது ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்பதாக இருக்கிறது. அது பாற்கடலில் பள்ளிகொண்டவனைப் பிரிந்தவள் அதன் பிறகு மணமகளாக ஆனபின்னர் பார்க்கிறாள். இது வால்மீகியில் இல்லை. பின் சீதை என்பது யார்? இது மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ராமாயணத்தில் பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் மேலே கேட்கப்பட்ட கேள்வி சீதைக்குப் பொருந்தும் என்பது என் தாழ்மையான கருத்து. ஒருவேளை அவள் திருமகள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் தெய்வத்துக்கு ஏதும் சிரமம் என்பதே கிடையாது. தெய்வம் தனக்கென நிர்ணயம் செய்து கொண்டதை கேள்வி கேட்பதற்கு நாம் யார்? பார்வதிதேவி காத்யாயினியாக, காமாட்சியாக அவதரித்து பூமியில் சிரமங்களுடன் தவம் செய்தாள். நாம் ஏனென்று கேட்கிறோமா? இல்லையே.. அதுபோலத்தான் சீதைக்கு நேர்ந்த சிரமங்களும். சீதை மாநிடப் பெண் என்று சொன்னால் அதற்கு ராமாயணத்தில் ஆதாரம் ஏது? 

உத்தரகாண்டத்தில் சீதை காட்டில் சிரமப்பட்டதாக எதுவும் எழுதவில்லை.. ஆனால் இராமன் மிகுந்த அவஸ்தைக்குள்ளானான். ராஜ்ஜியம் ஆளுவது என்பது அந்தக் காலத்தில் சத்திரய தர்மத்துடன் கூடிய ஆளுமையைக் காண்பிக்கவேண்டும். இந்தக்காலக்கண் கொண்டு ராஜ்ஜியம் ஆளுவதை நோக்கமுடியாது. அப்படியே நோக்கினாலும் இரண்டு மாதிரிகள் கீழே தருகிறேன்.
1. தர்மம் - மன்னர்கள்/ஆள்பவர்கள் ஸ்வதர்மம் காத்து ஆளவேண்டும் - ஜீலியஸ் சீஸர் சந்தேகத்திற்கப்பாற்பட்டவாறு இருக்க வேண்டும். சமீபகால உதாரணம் பில் கிளிண்டன் - மோனிகா விவகாரம். இந்த விஷயத்தில் பில் பீஸ் பீஸாக்கப்பட்டார். (நமது நாட்டிலும் இத்தகைய விவகாரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை தர்மம் தவறியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்) நம் நாட்டில் கூட குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் ஆட்சி கிடையாது. உதாரணங்கள் உண்டு..

2. தலை சரியாக இருந்தால் நாடு உருப்படும், மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி - எல்லா விஷயங்களிலும்.
சீதையைப் பிரிந்தது அந்த ஸ்வதர்மத்தில் சேர்த்திதான்.. உத்தரகாண்டம் பிரகாரம்,  இராமன் அவைக்கு முனிவர்கள் வருகிறார்கள். நாடு ஆளுமை பற்றி ராமச்சந்திர சக்கரவர்த்தி அவர்களைக் கேட்கிறார். முனிவர்கள் அனைவரும் நாட்டின் சுபிட்சத்தை, அரசனின் நல்லாட்சியைப் போற்றிவருகிறார்கள், என்கிறார்கள். இராமன் அவர்களை அப்படியே விடுவதாக இல்லை. வேறு எதிர்வார்த்தைகள் யாரும்பேசவில்லையா என்று கேட்கிறார். உண்மையே பேசும் முனிவர்கள் ‘துணிவெளுப்பவன் ஒருவனின் வம்புப்பேச்சையும் சீதா பிராட்டியை சற்று இழிவாகப் பேசியதைக் குறிப்பாக சொல்கிறார்கள். பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லியும் சத்திரிய தர்மத்தின் படி அவன் சீதையைக் காட்டில் கொண்டுவிடுமாறு (முதல்நாள்தான் சீதை இராமனிடம் தாம் இருவரும் ஓடியாடி மகிழ்ந்திருந்த காட்டுக்கு ஒருமுறை செல்லவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கிறாள்) சக்கரவர்த்தி ராமச்சந்திர மூர்த்தியாக ஆணை போடுகிறான். அவள் போனதும் சீதாராமனாக அவள் நினைவாகவே தன் வாழ்க்கையைக் கழிக்கிறான். 

அஸ்வமேதயாகம் செய்யும் போது கூட தன் மனைவி உருவத்தை பக்கத்தில் வைத்துச் செய்வதாக எழுதுகிறார்கள். சீதையின் வாழ்க்கை மகன்களோடு கழிகின்றது. ஸ்ரீராமனின் வாழ்க்கை தாமரை இலை நீர் போல கடமை மட்டுமே செய்யும் தர்மசீலனாகத் தொடர்கிறது. ஏன் பிற்பாடாவது மனைவியை அழைத்திருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். இது அவர்களாகவே தங்களுக்கென விதித்துக் கொண்ட ஒரு செயல். அதனை அதன் கண் விடல் என்பதே பொருத்தம். இது ஒரு தவ வாழ்வு இருவருக்குமே.. இல்லையென்றால் சீதை தன் குமாரர்களிடம் ராமகாதையை ஊரெங்கும் பரப்பிட வற்புறுத்தியிருப்பாளா. சீதை தாய் மட்டுமல்ல. தவசீலி. 

உத்தரகாண்டத்தை நம்மாழ்வார் படித்திருக்கிறார் ராஜம் அம்மா.. தான் திரும்பி வைகுண்டம் செல்லும்போது புல் பூண்டு போன்ற ஈன ஜன்மங்களுக்கும் உய்வளித்தான் ஸ்ரீராமன் என்பார். படித்தால் ராமனின் கதையை மட்டுமே படியுங்கள் என்று வேறு அறிவுறுத்துகிறார். (கற்பார் ராமபிரானையன்றி மற்றும் கற்பரோ)

ஸ்ரீராமநவமியன்று இந்தப் பதிவை இடவேண்டுமென்பது அவன் கட்டளை போலும்.

ஸ்ரீராம ஜெயராம சீதாராம்

அன்புடன்
திவாகர்.

Sunday, February 21, 2016


காந்தியும் மஹாத்மாவும்


 புல்தரையில்தான் அமர்ந்திருந்தார். பார்வையில் கூர்மை அவர் போட்டிருந்த கண்ணாடி வழியே தெரிந்தாலும், அவரை உற்றுப் பார்க்கத் தோன்றவில்லை. கொஞ்சமாக சிரித்தார். அந்த சிரிப்பிலே ஒரு தோழமைத் தனம் தெரிந்தது.

அவர் பெயர் பாபு படேல். அகமாதாபாதில் எனக்குத் தெரிந்தவர் ஒருவரால் சபர்மதி காந்தி ஆசிரமம் செல்லவேண்டுமென்பதற்காக உடனடி உதவிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு கைபேசி மூலம் அறிமுகப்படுத்தப் பட்டவர். அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. இந்தப் பெரியவர், நண்பரின் சொந்தத் தந்தை, என்பது.. முதலில் அவருடன் சேர்ந்து உட்காரப் போனேன்.
“வேண்டாம்.. இங்கே உட்கார்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்.. போய் அங்கே உள்ளே அமர்ந்து பாருங்கள்..” என்றவர் தன் கையை நீட்டி அந்த அறைகளைக் காண்பித்தார். .பார்க்க அப்படி ஒன்றும் தொண்டுக் கிழவர் போல இல்லைதான். கண்ணாடியும் சற்று குண்டான தோற்றமும் திடகாத்திர உடலும் ஏன் கையில் வைத்துள்ள கைத்தடியும் கூட அவர் வயதைக் கணிக்க உதவவில்லை. இருந்தாலும் அவர் சொல்லுக்கு உடனடியாக மதிப்புக் கொடுக்கவேண்டும் போல தோன்றியதால், அவர் கை காட்டிய இடத்துக்கு செல்வதாக தலையசைத்துச் சென்றேன்.

சபர்மதி நதிக் கரையில், நதியைப் பார்க்கும் திசையில் கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கட்டடம் எளிமைக்கு மறு சின்னமாக மட்டுமல்லாமல் புனிதத்தின் மறு உருவமாகவும் காணப்பட்டதால் மனதில் மரியாதை ஓங்க உள்ளே நுழைந்தேன்.
படுசுத்தமாக வைக்கப்பட்டிருந்த அறைக்கு ’ஹ்ருதய குஞ்ஜ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதயமாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியும் அந்தத் தந்தையின் அன்பான மனைவியான கஸ்தூரிபாய் காந்தியும் ஏறத்தாழ 12 ஆண்டுகள் குடியிருந்த இல்லம். எளிமை என்றால் என்ன என்பதற்கு கண்கூடு சாட்சியாக அந்த அறைகள் இருந்ததைக் கண்டதும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் கர்ப்பக்கிருகமாக அந்த அறை இருந்ததும், நேரு, இராஜாஜி, படேல் போன்ற தலைவர்களின் வருகையால் பெருமை பெற்றதும், கடைசியாக அந்த அறையிலிருந்துதான் புகழ்பெற்ற தண்டியாத்திரைக்கு மகாத்மா பயணப்பட்டார் என்பதெல்லாம் புரிந்ததால் புனிதம் அதிகமாக புலப்பட்டதுதான்.

பத்தடிக்குப் பத்தடியில் இரண்டே அறைகள், அதே அளவில்  ஒரு முற்றம், அந்த முற்றத்தைச் சுற்றி உள்ள சிறிய ஆனால் நீள் வராண்டா பகுதியில்தான் பார்க்க வந்த தலைவர்கள் தரையில் அமர்ந்திருப்பார்களோ என்னவோ, ரகுகுலத்தில் உதித்த அயோத்தி அரசனான இராமபிரானை இந்த முற்றத்தில் குளித்தபடியே மகாத்மா பாடியிருப்பாரோ என்னவோ.. என் மனதுக்குள் பரவசமும் கூடவே அந்த ’ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலும் கலந்து வலம் வந்தன. வலது பக்கப் பகுதி முழுவதும் சமையல் அறையாக கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. எத்தனையோ தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சோறுடைக்கும் அறையாக இருந்த இடமாயிற்றே. நினைத்தாலே மனம் பரவசத்தால் நிரம்பி வழிந்தது.

மறுபடியும் வெளியே வந்து அந்தப் பெரியவரைச் சந்தித்தேன். இப்போது சந்தித்தபோது என் மனதுள் அவரைப் பற்றிய பெருமை மேலும் உயர்ந்திருந்தது. பணிவோடு நின்று கொண்டேன்.. அவரே நல்ல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

”உள்ளே சென்றதும் உனக்குள் என்ன நினைப்பு வந்தது”.?

“மகாத்மா வாழ்ந்த அந்தக் காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் இங்கு இருந்திருப்பார்கள் என்ற கற்பனைதான் செய்து பார்த்தேன்”

படேல் சற்றே சிரித்தார். “ஏஸி, கட்டில், மெத்தை எல்லாம் இந்தக் காலத்தின் சொகுசு.. ஆனால் இந்த ஆற்றின் கரையோரம் என்பதால் எப்போதும் காற்று வீசும். இப்போது இங்கே சற்று தூய்மையாக அந்த நதி பார்ப்பதற்கு இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாம் அந்த நதிதான் இங்கே எல்லோருக்கும் எல்லாமும். அசுத்தமும் செய்வார்கள், சுத்தமாக இருப்பதற்கும் அந்த நீரை பயன்படுத்துவார்கள்.. ஆனால் மகாத்மா விடமாட்டார்.. அசுத்தம் செய்பவர்களை தன்னுடைய பாணியில் திருத்துவார்.  உப்பு சத்தியாக்கிரகத்து சமயம் ஏராளமாக தொண்டர்கள் அகமதாபாதில் வந்து குவிந்து விட்டார்களாம்.. அவர்கள் அனைவரும் காலைக் கடன்களை இந்த நதிக்கரையிலேயே முடித்துவிட்டு அவைகளை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டார்களாம். மகாத்மாவுக்கு வந்ததே கோபம்.. அவர் யாரையும் எதுவும் குறை சொல்லாமல் தானே கரைக்குப் போய் அந்த மலங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். உடனே மற்றவர்கள் ஓடி வந்துவிட்டார்கள். அவர்களும் பாடம் கற்று அந்த அசுத்தங்களை அகற்றினராம். என் தந்தையை மிகவும் கவர்ந்த இந்தழ்ச் செயலைச் சொல்லிச் சொல்லி நானும் முடிந்தவரை என் பிள்ளைகளுக்கும் சொல்லி வருகிறேன். மகாத்மாவின் மௌனமான இந்தப் பதில் நடவடிக்கையால் தொண்டர்கள் பயப்பட்டு ஒழுங்காக இருப்பார்கள்”.

“ஜி,, நீங்கள் மகாத்மாவைப் பார்த்திருக்கிறீர்களா?”

”ஏன்.. நான் சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லையா?”
“ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லை.. நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். நீங்கள் தொடருங்கள்..”

அவர் எழுந்தார்.. நதிக்கரையோரம் சென்றார்.. “இந்த நதி ரொம்ப அகலமானது. வெள்ளம் வரும்போது மகாத்மாவின் குடில் அருகே தண்ணீர் வந்து போகும். ஆனால் இப்போதுதான் நன்றாக உள்ளே தள்ளிக் கட்டிவிட்டார்கள்.. இந்த சிமண்ட் படிக்கட்டெல்லாம் ஒருகாலத்தில் தண்ணீர் ஓடும் பிரதேசம்தான்.. பிறகுதான் ஆற்றங்கரை.. ஆனால் இதெல்லாம் இப்போது இல்லை.. இரவு வந்து பார்.. வெளிச்சத்தில் நிறைய பேர் நடைபயிற்சி செய்வார்கள்.”
சபர்மதி நதியின் இரண்டு கரைகளையும் அடக்கிக் கட்டியிருந்தார்கள். சிமெண்ட் நடை பாதை ஏதோ அகலமான சாலை போல அழகாக இருந்ததுதான். அதன் நடுநடுவே விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. நீளமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அந்த சிமெண்ட் பாதை  துப்புரவுப் பணிகள் வெகு சீராக நடப்பதால் தூய்மையாகக் காணப்பட்டன. ஆனாலும் அந்தப் பட்டப்பகலில் சூரிய வெளிச்சம் அதிகமுள்ள அந்த நேரத்தில் மகாத்மாவின் குடில் அமைந்த பிரதேசம் தவிர அந்த நதிக்கரையோரம் மரங்களே தென்படவில்லை. இயற்கையான ஆற்றங்கரையும், பச்சைப் பசேலென்ற மரங்களும், புல்வெளியும் இல்லாத சபர்மதி ஆற்றின் அழகை ரசிக்க முடியவில்லை. அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன்.

“எங்கள் ஊர் நதிகளில் தண்ணீர் ஓடாதே தவிர புல்வெளி ஆற்றங்கரைகளும், மரங்களும் பார்ப்பதற்கு ஒரு அழகைத் தரும். சபர்மதி ஆற்றையும் அதன் கரையோரங்களும் சுத்தமாகத்தான் இருக்கின்றன.. ஆனால் இயற்கை அழகை இழந்து காணப்படுவது என்னவோ போல இருக்கிறது”..

நான் சொல்லக் கேட்ட பாபு படேல்ஜி சற்று நேரம் ஏதும் சொல்லாமல் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். பிறகு ஆசிரமத்தில் முக்கியமான பகுதியான காந்தி அருங்காட்சியகத்துள் நுழைந்தார். பல சரித்திரக் குறிப்புகள் புகைப்படத்துடன் கூடியவை நன்றாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிலவற்றை படேல்ஜி விவரித்தார். உப்பு சத்தியாகிரகத்தின் புகைப்படங்கள் அந்தக் கால கட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்றன. திரு பாபு படேலிடமிருந்து நிறைய விளக்கங்கள்  கிடைத்தன. சில ஏற்கனவே படித்தவை, சில தெரியாதவை.. ஆனால் அவர் சொல்லும்போது எல்லாமே நேரில் பார்ப்பது போல இருந்தது.
“மகாத்மா மிகப் பெரிய பிடிவாதக்காரர் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவர் பிடிவாதமெல்லாமே நன்மையில்தான் முடிந்தது. (தண்டி’யில் உப்புக் கிளறும் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து – இந்தப் படத்தில் ஒரு தமிழ்ப் பிராம்மணர் கூட குடுமியுடன் இருந்தார்) இதோ இங்கே பார்.. இந்த உப்பை எடுப்பதில் எத்தனை பேர் ஒன்றாய் இருக்கிறார்கள் பார், இந்து முஸ்லீம், கிருத்துவர் என்கிற பேதம் கிடையாது. அப்போதெல்லாம் ஜாதி வித்தியாசம் மிகவும் அதிகம். ஹரிஜன்கள் மிகக் கேவலமாக நடத்தப் பட்டார்கள். ஆனால் மகாத்மாவின் இருப்பிடத்தில் ஹரிஜன் மிகக் கௌரவமாக நடத்தப்படுவர். இந்தப் புகைப்படத்தை பார்த்தால் அனைத்து ஜாதியினரும் எப்படி சிரித்துக் கொண்டே பணி செய்தனர் என்பது புரியும். ஹரிஜன் மரியாதை மூலம் மிகப் பெரிய புரட்சியை இந்த நாட்டில் அப்போதே செய்து காட்டினார் மகாத்மா..”

“ஆனால் இப்போது ஜாதி அரசியல்தானே நாட்டை ஆள்கிறது?” என்னுடைய கேள்வி அவருக்கு சிரிப்பைக் கொடுத்தது.

“அரசியல் கிடக்கட்டும், இன்று ஹரிஜனர்கள் எத்தனை மேலிடத்தில் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமே.. மகாத்மா மட்டும் அன்று ஹரிஜன் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து இந்தியத் தலைவர்களிடம் புரட்சி செய்திராவிட்டால் இன்றைக்கு நாடு சுதந்திரம் அடைந்திருக்கலாம்தான். ஆனால் அடிமை வாழ்வு என்பது வேறு விதமாக அப்படியே தொடர்ந்திருக்கும்”.

“உண்மைதான் ஜி!. ஆனால்..

”என்ன ஆனால்.. நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி என்று சொல்வார்கள்.. ஆனால் நான் அப்படிச் சொல்லமாட்டேன்.. விடுதலை வாங்கித் தந்ததில் எல்லோருடைய பங்கும் சரிசமமாகத்தான் இருந்தது. இதில் மகாத்மாவின் பங்கு அதிகம் என்று கூட சொல்ல விரும்பவில்லை.. ஆனால் அவர் போராடியது இந்திய சமூகத்துக்காகத்தான். ஜாதி மத வேறுபாட்டைக் களைய விரும்பிய மிகப் பெரிய தலைவர் அவர். ஹரிஜன் என்ற பத்திரிகை ஒன்று துவங்கி அவர்களுக்காக மகாத்மா போராடத் துவங்கியது ஒரு மிகப் பெரிய தாக்கமாக இந்திய சமூகத்தின் மீது விழுந்தது..”

படேல்ஜி பேசிக் கொண்டே போனார். அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று தெரிந்துதான் இருந்தது.

”ஜி!.. நீங்கள் மகாத்மாவைப் பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? எப்படிப் பழக்கம்?”

”நான் சிறு வயதுப் பையன். என் தந்தை இங்கு ஒரு காலத்தில் கௌரவ உத்யோகம் பார்த்தவர்.. அவர் கூட இருப்பதால் அவர் நிறைய சொல்வார்.. நாங்கள் கேட்டுக் கொள்வோம். நான் மகாத்மாவிடம் பேசியதில்லை.. ஒருமுறை சிறுவயதில் தில்லி சென்றபோது இவனை ஏன் கூட்டி வந்தாய்? என்று என் தந்தையை கோபத்துடன் கேட்டார் மகாத்மா. நான் ஏதாவது பதில் பேசினேனா என்பது நினைவில் இல்லை. தந்தையுடன் ஒட்டிக் கொண்டு மகாத்மாவை ஆவலுடன் பார்த்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அது கூட ஒரு சிலமுறைகள்தான். ஏனெனில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறைய நாட்கள் மகாத்மா சிறையிலே கழித்தது ஒரு காரணம்.. இன்னொன்று அவருக்கும் கஸ்தூரிபாய்க்கும் உடல் நலம் குன்றியதும்தான். அவர்களை அடிக்கடி சபர்மதி வரவிடாமல் செய்துவிட்டது. உண்மையில் மகாத்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதால்தான் அவருக்கு அந்த போர்க்காலத்தில் விடுதலையே கிடைத்தது”..

“காந்தி வெகு வேகமாக வயதான காலத்தில் நடந்து போவதை படங்களில் பார்த்துள்ளேனே..”

“இல்லையில்லை.. அது ஒவ்வொருசமயம்தான்.. மற்றபடி அவருடைய பேத்திகள் துணையுடன் அவர்களைப் பிடித்தபடித்தான் செல்வார்.
1924 களில் ஒருமுறை மகாத்மா எரவாடா சிறையிலிருந்து உடல்நலம் குன்றியதற்காக விடுதலை செய்திருந்ததை ஒரு புகைப்பட விவரம் சுட்டிக் காட்டியது. அதையும் அவரிடம் காட்டினேன்..
“ஆமாம்.. நிறைய நடப்பார். நிறையப் படிப்பார். எல்லோருடையக் கடிதங்களையும் ஒன்று விடாமல்படித்துப் பதிலும் எழுதுவார். (ஒரு கடிதத்தில் கவர் பகுதியில் ‘மகாத்மா காந்தி, தி கிங் ஆஃப் இந்தியா,  – என விலாஸம் எழுதப்பட்டிருந்தது) அதிகம் சாப்பிட மாட்டார். தினமும் அலுவல்கள் அதிகம். நிறைய தலைவர்கள்.. நிறைய பேச்சு, மக்கள் கூட்டங்கள், ஒலிபெருக்கி அதிகம் இல்லாத காலத்தில் கத்திப் பேசவேண்டிய கட்டாயங்கள். தூக்கமின்மை.. இதையெல்லாம் நினைத்துப் பார். எந்த திடகாத்திரத்துக்கும் உடல் நொந்துபோகும்தான்.. மகாத்மாவுக்குத் தன்னைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது.. அதனால் ஓய்வு என்பதே தெரியாமல் பழகிவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான். என்ன பார்க்கிறாய்.. அடிக்கடி சிறையில் போட்டால் அவருக்கு ஓய்வுதானே..ஆனால் அங்கும் தூங்கவில்லை. நிறைய எழுதினார். அவருடைய ஜீவன சரித்திரம் கூட சிறையில்தான் எழுதினார்.”

தலையாட்டினேன். எளிமையின் மறு உருவம், உண்மையின் பிரதிபலிப்பு என்றெல்லாம் புகழப்பட்ட மகாத்மாவுக்கு ஓய்வு என்பது ஏது?..

”சரி, ஒன்றை மட்டும் கேட்கிறேன்.. வெளிப்படையாக தெரிந்ததைச் சொல்லுங்கள். காந்தியை ஏன் கொன்றார்கள்? அதுவும் நம்மவர்களே..”

”மகாத்மாவை ஏன் கொன்றார்கள்.. மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். மிகப் பெரிய கொடுமை அது. ஆனாலும் அப்படிக் கொல்லாவிட்டாலும் கூட அவர் சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்திருப்பார் என்றுதான் தொன்றியது.”
நான் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன்..

”மகாத்மா இறந்தபோது என் தந்தை கதறி அழுதது இன்னமும் கண்ணில் நிற்கிறது.. அந்தநேரத்தில் எனக்கு அது மிகப் பெரிய கவலையைக் கொடுக்கவில்லை.. ஏனெனில் அதைவிட மிகப் பெரிய கொடுமை இந்தியாவில் அந்த கால கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.. அதுதான் பாகிஸ்தான் பிரிவினையும், இந்து முஸ்லீம் அடிதடியும், ஏகப்பட்ட கொலைகளும்தான். எந்த நேரத்தில் என்ன நேருமோ என்ற பயம்தான் அப்போது இருந்தது. ஆனால் நிறைய வருஷமாக நினைத்துப் பார்த்ததில் மகாத்மா சுதந்திர இந்தியாவில் சீக்கிரமாகவே இறந்தது கூட நல்லதுக்குதான் எனப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் காந்தியைக் கண்டு பயப்பட்டார்கள்.. ஆனால் இந்தியர்கள் பயப்படவில்லை.. மரியாதை மட்டுமே காண்பித்து ஒதுங்கிக் கொண்டார்கள்.. இதுதான் உண்மை.. மகாத்மா தனது சத்தியாக்கிரஹ சக்தியை, எளிமையை, சத்தியத்தை ஊர் உலகம் பூராவும் காண்பித்து விட்டார். ஆனால்.சுதந்திர இந்தியாவில் அதே கொள்கை எடுபடாதோ என்ற சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. இந்த விதத்தில் சர்தார் படேல் நல்ல உத்தியைக் கையாண்டார். கத்திக்குக் கத்தி, சண்டைக்குச் சண்டை என்றுதானே அவர் இந்தியாவை ஒன்று சேர்த்தார்.. மகாத்மா இறந்த கால கட்டத்தில் நமக்குத் தேவையாக இருந்தது தேச ஒற்றுமை.. இது மகாத்மாவின் கடைசி கால கட்டத்தில் அவரால் முயன்றும் முடியாமல் போய்விட்டது.. இதுதான் உண்மை..”

எத்தனை சத்தியமான வார்த்தைகள். சுதந்திரம் வராத காலத்தில், அந்த சுதந்திரத்துக்காகப் பிடிவாதமாகப் போராடியதற்காக மரியாதை கொடுத்து மிகப் பெரிய உயரத்தில் துக்கி வைக்கப்பட்டிருந்த வயதான காந்திஜியை சுதந்திர இந்திய மக்கள் அதே உயரத்தில் வைத்திருப்பார்களா.. இல்லை சுற்றியுள்ள தலைவர்கள் காந்திஜி பேசும் அஹிம்சையயும் சத்தியத்தையும் இன்னமும் சகித்துக் கொண்டு அவர் சொல்படி கேட்டிருப்பார்களா.. ஆறே மாத சுதந்தர இந்தியாவையே அவரால் கண்ணீர் விட்டுக் கொண்டே பார்க்கமுடிந்ததே தவிர கம்பீரமாகப் பார்க்கவைக்கவில்லை என்பதுதானே உண்மை..

படேல்ஜிக்குத் தலை வணங்கினேன்..

“ஜி! நாம் பேசிக் கொண்டதை எழுத எனக்கு அனுமதி உண்டா..”
தாராளமாக எழுதேன்..என் பெயரை என் படத்தையெல்லாம் போடாதே.. என் மகனே திட்டினாலும் திட்டுவான் (ர்).. காந்தியம் பெயருக்குதான் இந்த நாட்டில் வாழ்கிறது.. உண்மையான காந்தியம் பேசி வாழ்ந்து காட்டுபவர்கள் மிக மிகக் குறைவு.. அதிகம் பேசினால் தற்போதைய கால கட்டத்தில் பைத்தியக் காரன் என்றாலும் சொல்வார்கள்”.
சிரித்தார் படேல்ஜி.

மகாத்மா காந்திக்கு மகாத்மா என்ற மரியாதை கொடுத்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த மகாத்மாவின் குடிசைக்குள் செல்லும் பேறு கிடைத்தது. ஆனால் அந்தப் பாக்கியத்தை விட மகாத்மாவின் அனுபவங்கள் பற்றிய படேல்ஜியின் கருத்துகள் எத்தனையோ ஆழமான உணர்வாக உள்ளத்தில் பதிந்துவிட்டதுதான். அவரின் பேச்சில் கடைசிவரை காந்தி எனும் வார்த்தை சொல்வதற்குக் கூட அவர் மறுத்து விட்டதும், மகாத்மா என்றே கூற என்னையும் கடைசியில் பிரியும்போது வற்புறுத்தியதும் நினைவில் கூடவே பதிந்துவிட்டது.


மகாத்மாவின் புகழ் இவரைப் போன்றவர்களால்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.. இன்னொருமுறை அகமதாபாத் சென்றால் மகாத்மாவைப் பற்றி இன்னும் நிறையக் கேட்கவேண்டும் இவரிடம்.. 

                                     *****************************

பின்குறிப்பு:
மேலே உள்ள புகைப்படங்கள் என் ஐ-பேட் மூலம் மகாத்மாவின் அருங்காட்சியகத்துப் புகைப்படங்களை அப்படியே உள்ளடக்கி எடுத்தது.